ஜப்பானில் அரிசி பற்றாக்குறை: சுற்றுலாப் பயணிகள், வெப்பம் காரணம்

ஜப்பானில் அரிசி பற்றாக்குறை: சுற்றுலாப் பயணிகள், வெப்பம் காரணம்

படம:ஏஎஃப்பி

31 Jul 2024 - 7:52 pm

2 mins read

இந்நூற்றாண்டில் வரலாறு காணாத அளவுக்கு ஜப்பானின் அரிசி இருப்பு மிகவும் குறைந்துள்ளது. சுஷி, ஒனிகிரி போன்ற பிரபலமான உணவு வகைகளை அதிகரித்துவரும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் விரும்பி உட்கொள்வது முக்கிய காரணங்களில் ஒன்று. இதனை ஜப்பானிய அதிகாரிகள் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் ஜூலை 31 அன்று தெரிவித்தனர்.

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, தண்ணீர் பற்றாக்குறை, விலையேற்றம் ஆகியனவும் அரிசி இருப்புகள் குறைவதற்கான காரணங்கள் என்று விவசாய அமைச்சு வலியுறுத்தியது. ஜப்பானியர்கள் கோதுமை, கிழங்கு வகைகள், பாஸ்தா போன்றவற்றை மாற்றாக நாடுவதும் அரிசி விலை ஏற்றத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

தனியார் துறையின் இருப்புகளில் 1.56 மில்லியன் டன் அரிசி உள்ளது. கடந்த 1999க்குப் பிந்திய கணக்குகளின்படி, இது ஆகக் குறைவான அளவாகும். ஆண்டு அடிப்படையில் இது 20.8 விழுக்காடு குறைவு என்று ஜூலை 30 அன்று அமைச்சின் தரவுகள் சுட்டுகின்றன.

ஜப்பானில் அரிசிப் பஞ்சம் ஏற்படும் நிலை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டின் முதல்பாதியில் 17.78 மில்லியன் சுற்றுப்பயணிகள் ஜப்பான் சென்றுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் அரிசித் தேவை 31,000 டன்னிலிருந்து 51,000 டன்னுக்கு உயர்ந்துள்ளதாக ஜப்பானிய அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் 125 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டது. இவ்வாண்டு ஏப்ரலில் மட்டும் 36 பேர் அங்கு வெப்பத் தாக்கத்தால் மரணமடைந்துள்ளனர் என்று ஜப்பானிய பேரிடர் மேலாண்மை முகவை அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்