டிரம்ப் மீது கமலா ஹாரிஸ் கடும் தாக்கு

2 mins read
247d68f0-0b96-4249-8a19-46dad7e1c45c
அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக ஜூலை 21ஆம் தேதி திரு பைடன் அறிவித்த பின்னர் நடைபெற்ற முதல் பிரசாரக் குழுவினர் கூட்டத்தின் மத்தியில் திருவாட்டி ஹாரிஸ் பேசினார். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தமது பிரசாரத்தில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

மோசடி செய்பவர்கள், வேட்டையாடுபவர்கள் என்று குடியரசுக் கட்சியினரை விமர்சித்த அவர், டிரம்ப் எப்படிப்பட்டவர் என்பது எனக்குத் தெரியும் என்று குறிப்பிட்டார்.

அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக ஜூலை 21ஆம் தேதி திரு பைடன் அறிவித்த பின்னர் நடைபெற்ற முதல் பிரசாரக் குழுவினர் கூட்டத்தின் மத்தியில் திருவாட்டி ஹாரிஸ் பேசினார்.

டெலவேர் மாநிலத்தின் வில்மிங்டன் நகரில் உள்ள பிரசாரத் தலைமையகத்தில் உரையாற்றிய திருவாட்டி ஹாரிஸ், நவம்பர் “தேர்தலில் நாம் வெல்லப்போகிறோம்” என்று புன்னகை ஏந்தியவாறு பேசினார்.

திரு பைடன் விலகலை அறிவித்த பின்னர் கடந்த சில நாள்கள் ‘ரோலர் கோஸ்டர்’ வேகத்தில் சென்றதைத் தொடர்ந்து பிரசார அலுவலகத்துக்கு நேரடியாக வர விரும்பியதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் டிரம்ப் மீதான தாக்குதலை அவர் தொடங்கினார்.

துணை அதிபர் பொறுப்புக்கு வரும் முன்னர் கலிஃபோர்னியாவில் அரசுத் தரப்பு தலைமை வழக்கறிஞராக தாம் பணியாற்றியபோது எல்லாவிதமானக் குற்றவாளிகளையும் தாம் கண்டதாக அவர் தெரிவித்தார்.

“பெண்களை வேட்டையாடக்கூடியவர்கள், பயனீட்டாளர்களிடம் மோசடி செய்யக்கூடியவர்கள். சொந்த நலனுக்காக விதிகளை மீறி ஏமாற்றக்கூடியவர்கள்.

“டோனல்ட் டிரம்ப் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியும் என்று நான் கூறும்போது அது எதற்காக என்று நீங்கள் கவனிக்க வேண்டும்,” என்று திருவாட்டி ஹாரிஸ் பலத்த கைதட்டல்களுக்கு இடையில் பேசினார்.

டிரம்ப் பதிலடி

அதிபர் தேர்தல் பிரசாரத்தில் தம்மைத் தாக்கிப் பேசிய கமலா ஹாரிசுக்கு டோனல்ட் டிரம்ப் பதிலடி தருவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட இருப்பதாக வெளிவரும் செய்திகளையும் அதன் மூலம் ஜனநாயகக் கட்சியினர் புத்துணர்ச்சி பெற்று வருவதையும் கவனித்து வரும் டிரம்ப், வடகரோலினாவில் புதன்கிழமை நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பதிலடி தருவார் என்று தெரிவிக்கப்பட்டது.

கமலா ஹாரிஸ் களமிறங்குவதாக பேச்சு அடிபடத் தொடங்கிய பிறகு நடைபெறும் குடியரசுக் கட்சியின் முதல் பிரசாரக்கூட்டம் அது. வடகரோலினாவின் சார்லோட் நகரில் டோனல்ட் டிரம்ப் பிரசாரம் செய்யும்போது கமலா ஹாரிசுக்குப் பதிலடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்