இரவு கேளிக்கை கூடங்களுக்கான சட்டங்களில் சில தளர்வுகள் வேண்டும்: ஜோகூர் பொழுதுபோக்கு வர்த்தக சங்கம்

இரவு கேளிக்கை கூடங்களுக்கான சட்டங்களில் சில தளர்வுகள் வேண்டும்: ஜோகூர் பொழுதுபோக்கு வர்த்தக சங்கம்

2 mins read
401413d7-5149-4566-8cb3-78896963bcf0
ஜோகூரில் நள்ளிரவுக்குப் பின் கேளிக்கை கூடங்கள் செயல்படக்கூடாது, வார இறுதிகளில் அவை பின்னிரவு 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி உண்டு. - படம்: த நியூபேப்பர்

கோலாலம்பூர்: ஜோகூர் அரசாங்கம், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும்தான இரவு நேரப் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்க அனுமதிக்கிறது.

இந்தக் கடுமையான சட்டத்தில் சில தளர்வுகள் வழங்கப்பட்டால் பொழுதுபோக்கு வர்த்தகம் வளரும். மேலும், ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் வட்டாரத்திற்கு இது பங்காற்றும் என்று பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் கருதுகின்றன.

குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே  இரவு நேர பொழுதுபோக்கு நடவடிக்கையில் ஈடுபடும் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றால் அது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று ஜோகூர் பொழுதுபோக்கு வர்த்தக சங்கத்தின் தலைவர் டான் யம் மெங் தெரிவித்தார்.

இந்த சட்டங்கள் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவை ஜோகூர் பாரு நகர மன்றம் மற்றும் இஸ்கந்தர் புத்தேரி நகர மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பின்பற்ற வேண்டும் என்று மெங் குறிப்பிட்டார்.

“தாமான் பிளாங்கி ஒரு நல்ல எடுத்துக்காட்டு என்று சொன்ன அவர், அப்பகுதியில் குறிப்பிட்ட சில வீதிகளில் மட்டும் தான் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இடம்பெற அனுமதி உண்டு. அனுமதி வழங்கப்பட்ட இடமும் மிகவும் சிறிது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் பொழுதுபோக்கு துறையில் இருந்த பல நிறுவனங்கள் அந்த சிறிய பகுதிக்குள் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல நிறுவனங்களுக்கு இடம் கிடைக்கவில்லை அதனால் அவர்களுக்கு உரிமமும் கிடைக்கவில்லை,” என்றார். 

“ஜோகூரில் தான் இம்மாதிரியான சட்டம் இருக்கக்கூடும், அதனால் ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்பு பொருளியல் வட்டாரம் மாநிலம் மற்றும் நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்குப் பங்காற்றவிருக்கும் வேளையில் மாநில அரசாங்கம் வெளிப்படையாகச் செயல்பட்டு சட்டத்தில் சில தளர்வுகளை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“பொழுதுபோக்கு கூடங்களை ஆபத்தான துறையாகப் பார்க்கக்கூடாது. தாய்லாந்து, வியட்னாமில் பொழுதுபோக்கு கூடங்கள் அதிகாலை 4 மணி வரை செயல்படும். அதனால் அவை பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன, மேலும் வர்த்தகமும் வளர்கிறது. ஆனால் ஜோகூரில் நள்ளிரவுக்குப் பின் செயல்படக்கூடாது, வார இறுதிகளில் பின்னிரவு 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி உண்டு. ஆனால் அதற்கு பெரும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்” என்று திரு மெங் அவரது கருத்தை பதிவு செய்தார்.

குறிப்புச் சொற்கள்