நியூயார்க்: கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் மத்திய அட்லாண்டிக் வட்டாரத்திலும் புதன், வியாழக்கிழமைகளில் காற்றுத் தூய்மைக்கேடு நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சில வாரங்களுக்குமுன் அப்பகுதி புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.
நியூயார்க்கின் மேற்கு, மத்திய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவை எட்டக்கூடும் என்று மாநில ஆளுநர் கேத்தி ஹோச்சுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
காற்றின் தரம் எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை என்றும் வியாழக்கிழமையிலிருந்து நியூயார்க் நகரம் புகைமூட்டத்தால் பாதிக்கப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
புகைமூட்டத்தை முன்னிட்டு விமானச் சேவைகள் தாமதமாயின. வெளிப்புற நிகழ்ச்சிகள் சில ரத்து செய்யப்பட்டன. புகைமூட்டம் குறித்து விழிப்புடன் இருக்கும்படி நியூயார்க் மக்களை மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.