வாஷிங்டன்: அமெரிக்காவில் ஐவருக்கு மலேரியா நோய் உறுதிசெய்யப்பட்டதையடுத்து ‘சிடிசி’ எனப்படும் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் சுகாதார எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்நாட்டளவில் மலேரியா நோய் பரவுவது இதுவே முதல்முறை.
ஃபுளோரிடா மாநிலத்தில் நான்கு பேரும் டெக்சசில் ஒருவரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் யாரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் அல்லர் என்றும் நிலையம் தெரிவித்தது.
“ஐந்து நோயாளிகளும் சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருகின்றனர்,” என்று அது குறிப்பிட்டது.
வேறு யாரும் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்று அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொசுக்களைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கொசுக்களால் பரவும் மலேரியா நோய் குறித்து இரு மாநில அரசாங்கங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளன. தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றுமாறும் முழுக்கைச் சட்டை, முழு நீளக் காற்சட்டைகளை அணியும்படியும் மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
மலேரியாவை மருத்துவ நெருக்கடி நிலையாகக் கருதுவதாகவும் அந்நோய் கண்டறியப்பட்டால் உடனடியாக உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் ‘சிடிசி’ கூறியது.

