டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஊபர் கார் ஓட்டுநரான 52 வயது டேனியல் பிட்ரா கார்சியா பெண் பயணி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஃபோப் கோபாஸ் எனும் அம்மாதுக்கு வயது 48.
சம்பவம் ஜூன் 16 ஆம் தேதி நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பிட்ரா தன்னை டெக்சஸில் இருந்து மெக்சிகோவிற்குக் கடத்திச் செல்வதாக நினைத்து பதற்றத்தில் தன் கைப்பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துச் சுட்டதாக காவல்துறையினரிடம் அம்மாது தெரிவித்தார்.
பிட்ராவின் தலையில் அவர் சுட்டதையடுத்து அந்த கார் சாலைத் தடுப்புச் சுவரில் மோதி நின்றதாகக் கூறப்பட்டது.
கென்டக்கியில் இருந்து டெக்சஸின் எல் பாசோவில் உள்ள ராக் கேசினோவுக்குத் தன் காதலரைப் பார்க்கச் செல்வதற்காக கோபாஸ் ஊபர் காரைப் பதிவுசெய்தார்.
ஓட்டுநர் பிட்ரா, எல் பாசோவிற்குச் செல்லும் சரியான பாதையில்தான் சென்றதாகத் தெரிகிறது.
இருப்பினும் அந்த மாது அவரை ஏன் சுட்டார் என்று தெளிவாகத் தெரியவில்லை எனக் காவல்துறை கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த மாது சுடுவதற்குமுன் தான் ஆபத்தில் இருப்பதாகக் காவல்துறைக்கு உதவி கேட்டு அழைக்கவில்லை. பிட்ராவைச் சுட்டுக் கொன்ற பிறகு அதை புகைப்படம் எடுத்துத் தன் காதலருக்கு அனுப்பியதாகவும் அதன்பிறகே உதவி கேட்டு 911 என்ற எண்ணை அழைத்ததாகவும் காவல்துறை கூறியது.
முன்னதாக பிட்ராவை கடுமையாகத் தாக்கிய குற்றத்திற்காக கோபாஸ்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மருத்துவமனையில் இறந்ததால் அவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
கோபாஸ் $1.5 மில்லியன் அமெரிக்க டாலர்(S$2 மில்லியன்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஊபர் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.