கோலாலம்பூர்: அடையாளம் காணப்படாத ஒரு மனித உடல், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் அனைத்துலக விமான நிலைய முனையம் 2ல், ஓர் விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) காலை 6.55 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
ஆணா அல்லது பெண்ணா என்ற அந்த உடலின் பாலினம் குறித்தத் தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஜப்பான் தலைநகர் தோக்கியோவிலிருந்து வந்து தரையிறங்கிய விமானத்தில் அந்த உடல் ஜீன்ஸ் வகை காலாடையும் வெள்ளை நிற மேலாடையும் அணிந்திருந்த நிலையில் இருந்துள்ளது.
விமானத்தைச் சோதனையிடும் பொறியியலாளர் குழுவினர் சக்கரப் பாகத்தைத் திறப்பதற்கு முன்னர் சந்தேகத்துக்குரிய வகையில் அதிலிருந்து துர்நாற்றம் கிளம்பியதைத் தொடர்ந்து அதனைத் திறக்க முடிவெடுத்தனர்.
பிறகு அதனை முழுமையாகத் திறந்து பார்வையிடும்போது அதனுள் இருந்த உடலைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.
உடல் கண்டுபிடிக்கப்பட்டவுடன், விமான நிலைய முனையம் 2ன் காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினருடன் தடயவியல் பிரிவினரும் விசாரணை நடத்திவருகின்றனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் அந்த உடல் 20 வயதுக்கு உட்பட்டவருடையது என்றும் அவரது உயிர் பிரிந்து 72 மணி நேரம் ஆகியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
எவ்வித ஆவணங்களும் அந்த உடலுடன் காணப்படவில்லை. மரணத்துக்கான காரணங்களையும் மாண்டவரின் அடையாளத்தையும் அறிய விசாரணை தொடர்கிறது.


