ஆள்கடத்தல், மோசடிக் கும்பல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முறியடிப்பு

ஆள்கடத்தல், மோசடிக் கும்பல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் முறியடிப்பு

2 mins read
வெளிநாட்டு ஊழியர்களின் முகவர்களாக 2019ஆம் ஆண்டுமுதல் மோசடிக் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது
36296f82-7010-4001-8ca9-f99112c09987
குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் சக்காரியா ஷபான் (இடமிருந்து இரண்டாமவர்) செய்தியாளர் கூட்டத்தில் குற்றக் கும்பல் பற்றிய விவரங்களை வெளியிட்டார். - படம்: த ஸ்டார்

புத்ரா ஜெயா: ஏழு ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் செயல்பட்டு வந்த ஆள்கடத்தல், மோசடிக் கும்பல் தலைநகர் கோலாலம்பூரில் முறியடிக்கப்பட்டதாகக் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் சக்காரியா ஷபான் புதன்கிழமை (ஏப்ரல் 15) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அந்தக் கும்பல் கடந்த ஆறு மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டு, அவர்கள்மீது திங்கட்கிழமை சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில் 26 முதல் 61 வயதுக்குட்பட்ட ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2019 முதல் செயல்பட்டுவந்த அக்கும்பல், ஏறத்தாழ 100 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் மோசடிமூலம் ஈட்டியுள்ளதாக திரு ஷபான் குறிப்பிட்டார். ‘ஆப்ஸ் செர்காப்’ என்ற பெயரில் கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு வெவ்வேறு இடங்களில் குடிநுழைவுத் துறையினர் சோதனைகள் நடத்தினர்.

கைது செய்யப்பட்டோரில் மூன்று நேப்பாள நாட்டினர், மூன்று இந்தியர்கள், ஒரு பங்ளாதே‌ஷ் நாட்டவர், ஒரு மலேசியர், மலேசிய நிரந்தரவாசியான ஒரு வியட்னாமிய மாது ஆகியோர் அடங்குவர்.

உள்ளூர் ஆடவரும் வியட்னாமியரும் நிறுவனத்தின் இயக்குநர்கள். கைதான மூன்று நேப்பாளிகளில், 43 வயதான ஒருவரே குற்றச் செயல்களுக்குத் தலைவராகச் செயல்பட்டுவந்தார்.

மேலும் கடந்த 2016ஆம் ஆண்டில் புக்கிட் அமான் தீவிரவாதத் தடுப்புப் பிரிவில் அவர் விசாரணைக் கைதியாக இருந்தது பதிவுகளில் கண்டறியப்பட்டது என்று திரு சக்காரியா சுட்டிக் காட்டினார்.

இதுவரையில் 111 வெளிநாட்டவர்களின் கடப்பிதழ்கள், 10 மடிக்கணினிகள், ஆறு கைப்பேசிகளுடன் ரொக்கமாக 3,950 மலேசிய ரிங்கிட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியரிடமும் குற்றக்கும்பல் 5,000 முதல் 6,000 வரை வசூலித்துள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக ஊழியர்களை மலேசியாவுக்குள் அது கடத்தி வந்ததாகவும் நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்