நேப்பாளம்: எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் அடிவார முகாமில் பனி அதிவேகமாக உருகுவதற்கு, ஆண்டுதோறும் அங்கு வரும் பல்லாயிரக்கணக்கான மலையேறிகளின் சிறுநீரும் ஒரு முக்கியக் காரணம் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேப்பாளத்தின் கும்பு பனிப்பாறைப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த முகாமில், ஒவ்வொரு மலையேற்றக் காலத்திலும் ஆயிரக்கணக்கான மலையேறிகளும் அவர்களின் வழிகாட்டிகளும் தங்குகின்றனர். அவர்களின் சிறுநீர், சுற்றியுள்ள பனிக்கட்டிகளுடன் கலந்து வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதனால் வெளிப்படும் அம்மோனியா போன்றவற்றின் வேதிவினை, பனிப்பாறை உருகும் வெப்பநிலையைக் குறைக்கிறது. இதனால் பனிப்பகுதிகள் வழக்கத்தைவிட மிக வேகமாக உருகத் தொடங்குகின்றன.
உலக வெப்பமயமாதல் காரணமாக எவரெஸ்ட் பகுதியில் ஏற்கெனவே பனிப்பாறைகள் வேகமாக உருகிவரும் சூழலில், மனிதக் கழிவுகளால் ஏற்படும் இந்தக் கூடுதல் பாதிப்பு சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அடிவார முகாமின் அமைவிடத்தையே மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் இதனால் உருவாகக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, எவரெஸ்ட் முகாம் பகுதியில் சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாக்கவும் பனி உருகுவதைக் கட்டுப்படுத்தவும் கழிவு மேலாண்மை நடைமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். எவரெஸ்ட்டின் இயற்கைச் சமநிலையைப் பேணத் தவறினால், எதிர்காலத்தில் மலையேற்ற நடவடிக்கைகள் பெருஞ்சவாலுக்கு உள்ளாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


