புத்ரா ஜெயா: சமூகப் பின்னணியைப் பார்க்காமல் மனிதநேயத்துடன் உதவி செய்த முஹம்மது யூசோஃப் முஹம்மது நூர் மற்றும் டிக்கி யாவ் ஆகியோரின் செயலைத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் பாராட்டினார்.
பின்னிரவு 12.30 மணிக்கு மோட்டார் சைக்கிள் பழுதாகி சாலையில் சிக்கிக்கொண்டிருந்த டிக்கிக்கு, யூசோப் உதவி செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரலாகப் பகிரப்பட்டதைக் குறிப்பிட்டு, அது உண்மையான ஒருமைப்பாட்டின் எடுத்துக்காட்டாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இனம், சமயம் மற்றும் சமூக நிலை எல்லைகளைத் தாண்டிய மனிதநேயத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துவதாக அவர் புகழாரம் சூட்டினார்.
யூசோஃப்பும் டிக்கியும் காட்டிய செயல் நம் நாட்டைப் பிரதிபலிக்கின்றது. மரியாதை, கருணை, ஒற்றுமை ஆகியவற்றின்மீது கட்டியெழுப்பப்பட்ட நாடு என்பதற்கான சான்றாக அவர்களின் செயல் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், சாதாரண நபர்கள் சமூக நலனுக்காக மேற்கொள்ளும் அசாதாரண செயல்களுக்குப் பாராட்டாக ‘மடானி ஒருமைப்பாட்டு நண்பர்’ என்ற நற்சான்றிதழ்களைத் துணையமைச்சர் வழங்கி அவர்களைக் கௌரவித்தார்.
“யூசோஃப் மனப்பூர்வமாக உதவி செய்தார். டிக்கி அந்த மனிதநேயக் கதையின் ஒரு பகுதியாக இருந்து, சமூகத்தில் இன்னும் நல்லிணக்கம் உயிரோடு இருப்பதை நினைவூட்டினார்.
“அவர்கள் இருவரும் சிறிய மனிதநேயச் செயல்கள் கூட பெரிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் என்பதைக் காட்டும் முன்னுதாரணங்கள்,” என்று யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
“மேலும், இச்சம்பவம் மக்களிடையே உதவும் மனப்பான்மையை வளர்க்கவும் பல்வேறு சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணவும் ஊக்கமளிக்க வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
“மலேசியா மடானி கொள்கையின்கீழ், மக்களை ஒன்றிணைக்கும் ஒவ்வொரு நல்ல செயலையும் பாராட்டி அதை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

