அமெரிக்காவுக்கு அவமானகரமான தோல்வி: ஈரான் கொக்கரிப்பு

அமெரிக்காவுக்கு அவமானகரமான தோல்வி: ஈரான் கொக்கரிப்பு

2 mins read
f6e1e829-47cb-410f-ba25-5a30825a16a2
ஏப்ரல் 29ஆம் தேதி அரசாங்க ஆதரவுடன் நடத்தப்பட்ட பேரணியில் பங்கேற்ற ஒரு பெண் புதிய உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனியின் படத்தை ஏந்தியுள்ளார். - படம்: நியூயார்க்டைம்ஸ்

டெஹ்ரான்: ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுக்கு அவமானகரமான தோல்வி ஏற்பட்டுள்ளதாக கொக்கரித்துள்ளார்.

ஈரானை பொருளியல்ரீதியாக தண்டிக்கும் வகையில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை வரும் மாதங்களில் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ள வேளையில் ஈரானின் அறிக்கை வெளியானது.

கச்சா எண்ணெயின் விலை நான்கு ஆண்டுகள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மொஜ்தபா காமெனியின் அறிக்கை தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. இந்தப் போரில் ஈரான் ஆதிக்கம் செலுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டது.

“உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகள் இவ்வட்டாரத்தில் இரண்டு மாதங்களாக ராணுவப் படைகளைக் குவித்து ஆக்கிரமித்துள்ளன. இதில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது. பெர்சியா வளைகுடாவிலும் ஹோர்முஸ் நீரிணையிலும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது,” என்று ஈரானிய உச்சத் தலைவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைமீதான ஈரானின் கட்டுப்பாட்டை அவர் பாராட்டினார்.

அமெரிக்கா இல்லாத வளைகுடாவிற்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் கூறிய அவர், வெகுதூத்திலிருந்து இவ்வட்டாரத்தில் தலையிடுபவர்களுக்கு இங்கு இடமில்லை என்றார்.

போரின் தொடக்கத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்கியதில் அப்போதைய ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தற்போதைய உச்சத் தலைவரான காமெனி படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈரானின் இரண்டு துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது. ஆனால் அதே சமயத்தில் பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணைமீதான தனது பிடியை ஈரான் இறுக்கி வருகிறது.

இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக நட்பு நாடுகள் மற்றும் கப்பல் நிறுவனங்களின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்