டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம், ஈரானுக்கு எதிரான போரில் நாடாளுமன்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவுக்குப் பணியப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து சிறிய விமானங்களையும் ஆளில்லா வானூர்திகளையும் எதிர்கொள்வதற்காக வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ஈரான் தனது வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தியது.
அமெரிக்காவின் சட்டப்படி அதிபர், ஒரு நாட்டின்மீது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை 60 நாள்களுக்குள் பெற வேண்டும். இந்தக் காலக்கெடு தற்போது முடிவடைய உள்ளது.
ஆனால் ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தால் காலக்கெடு முடிவுக்கு வரவில்லை என்று டிரம்ப் நிர்வாகம் வாதிடுகிறது.
இதற்கிடையே ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி, அமெரிக்காவுக்கு அவமானகரமான தோல்வி ஏற்பட்டுள்ளதாகக் கொக்கரித்துள்ளார்.
ஈரானை பொருளியல் ரீதியாக தண்டிக்கும் வகையில், அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை வரும் மாதங்களில் தொடரலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ள வேளையில் ஈரானின் அறிக்கை வெளியாகியுள்ளது.
மொஜ்தபா காமெனியின் அறிக்கை தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. இந்தப் போரில் ஈரான் ஆதிக்கம் செலுத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
“உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நாடுகள் இவ்வட்டாரத்தில் இரண்டு மாதங்களாக ராணுவப் படைகளைக் குவித்து ஆக்கிரமித்துள்ளன. இதில் அமெரிக்காவின் திட்டங்களுக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது. பெர்சியா வளைகுடாவிலும் ஹோர்முஸ் நீரிணையிலும் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது,” என்று ஈரானிய உச்சத் தலைவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை மீதான ஈரானின் கட்டுப்பாட்டை அவர் பாராட்டினார்.
அமெரிக்கா இல்லாத வளைகுடாவிற்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகக் கூறிய அவர், வெகுதூரத்திலிருந்து இவ்வட்டாரத்தில் தலையிடுபவர்களுக்கு இங்கு இடமில்லை என்றும் சொன்னார்.
அதே சமயத்தில் அமெரிக்காவின் எத்தகைய தாக்குதல்களையும் எதிர்கொள்ள ஈரான் தயாராகி வருகிறது. சிறிய விமானங்கள் அல்லது ஆளில்லா வானூர்திகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த அது வான் தற்காப்பு கட்டமைப்புகளை செயல்படுத்தியுள்ளது.
போரின் தொடக்கத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்கியதில் அப்போதைய ஈரானின் உச்சத் தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்தில் தற்போதைய உச்சத் தலைவரான காமெனி படுகாயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஈரானின் இரண்டு துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது. ஆனால், அதே சமயத்தில் பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மீதான தனது பிடியை ஈரான் இறுக்கி வருகிறது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதற்காக நட்பு நாடுகள் மற்றும் கப்பல் நிறுவனங்களின் உதவியை அமெரிக்கா நாடியுள்ளது.

