ரியாவ் தீவிலுள்ள பாத்தாம் நகரில் குடிநுழைவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் பிடிபட்டுள்ளனர்.
பாத்தாமின் வர்த்தக வட்டாரமான லுபுக் பஜாவில் உள்ள பலோய் வியூ (Baloi View) அடுக்குமாடி வீட்டில் புதன்கிழமை (மே 6) கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எத்தனை பேர் கைதானார்கள் என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
குடிநுழைவுத் துறையின் புலனாய்வுப் பணி, பொதுமக்கள் புகார் ஆகியவற்றிலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.
அகப்பட்டவர்கள் சீனா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்பக்கட்டத் தகவல்கள் காண்பிக்கின்றன.
காதல் மோசடி, இணையச் சூதாட்டம், தகவல் திருட்டு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்றனர்.
நூற்றுக்கணக்கான திறன்பேசிகள், மடிக்கணினிகள், இணையத் திசைவிகள் (network routers), சிறிய சேவையகங்கள் (mini servers) போன்ற ஏராளமான மின்னணுச் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்கள் ‘ஏஎக்ஸ்’ என அடையாளம் காணப்பட்ட உள்ளூர் தொழிலதிபர் ஒருவரின் ஆதரவுடன் செயல்படுவதாக நம்பப்படுகிறது.
ஆயினும், பின்னணியில் இதனை வழிநடத்துபவர்கள் யார் என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. விசாரணை தொடர்கிறது.

