லிஸ்பன்: போர்ச்சுகலின் புகழ்பெற்ற விடுமுறைத்தலமான காஸ்காயிசுக்கு அருகிலுள்ள ஒரு பூங்காவில் காட்டுத்தீ பரவியது.
அதை அணைக்க உள்ளூர்வாசிகளுடன் இணைந்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். அங்கு பலத்த காற்று வீசுவதால், தீயை அணைப்பது சற்று சிக்கலாக உள்ளது.
இந்தக் காட்டுத்தீ சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பிடித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
தீயை அணைக்கும் முயற்சியில் 189 தீயணைப்பு வாகனங்களும், 600க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், நீர்க்குண்டு வீசும் விமானங்களும் ஈடுபட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பூங்காவிற்கு அருகே வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் நடமாட சிரமப்படுவோரை உள்ளூர்வாசிகள் உதவியுடன் சக்கர நாற்காலிகள் பயன்படுத்தி வெளியேற்றினோம் என்றும் காஸ்காயிஸ் மேயர் கார்லோஸ் கரேராஸ் தெரிவித்தார்.
தங்கள் வீடுகளைக் காட்டுத் தீயிலிருந்துப் பாதுகாக்க உள்ளூர்வாசிகள் வீடுகளின்மீது குழாய்கள், வாளிகள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
காட்டுத்தீயால் வீடுகள் எதுவும் சேதமடையவில்லை எனவும் யாருக்கும் கடும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.