குடும்பங்களை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான நேப்பாளச் சிறுவர்கள்

குடும்பங்களை இழந்து தவிக்கும் நூற்றுக்கணக்கான நேப்பாளச் சிறுவர்கள்

2 mins read
323d7081-f5f1-4a86-a40e-0120b12d6264
சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலைப் போக்க ஆசிரியர்களும் உளவியலாளர்களும் விளையாட்டு போன்ற பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

காத்மாண்டு: நேப்பாளத்தின் எல்லையில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அந்த வெள்ளத்தில் நேப்பாளத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1,400 பேர் மாண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் 5,130 பேரைக் காணவில்லை. சீனாவில் 43 பேர் மாண்டனர். 519 பேரைக் காணவில்லை.

இந்நிலையில், நேப்பாளத்தில் 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தங்கள் பெற்றோரைப் பிரிந்து தவிக்கின்றனர்.

‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு நடத்தும் நிவாரண முகாம்களில் சிறுவர்கள் பலர் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் அதிர்ச்சியிலும் பயத்திலும் உறைந்துள்ளனர்.

நுவாகோட் மாவட்டத்தில் உள்ள 12 வயது ரித்து மாயா தமாங் என்ற சிறுமியும் இதில் அடங்குவார். ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் இவரது தாயார் மாண்டுவிட்டார். இவரது தங்கை நுரையீரல் அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய தாயாரின் முகக்கவசத்தை மட்டுமே அந்தச் சிறுமி நினைவுப் பொருளாக வைத்துள்ளார். பல துயரங்களுக்கு மத்தியிலும் எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர் படித்து வருகிறார்.

பாதிக்கப்பட்ட ஏறத்தாழ 1,000 மாணவர்களுக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என நேப்பாள அரசு அறிவித்துள்ளது.

பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்நாட்டுக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலைப் போக்க, ஆசிரியர்களும் உளவியலாளர்களும் விளையாட்டு போன்ற பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் ஆகும் என்று நிபுணர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்