இரண்டு மரணங்களை அடுத்து நிறுத்தப்பட்ட ஹங்கேரி இசை விழா

இரண்டு மரணங்களை அடுத்து நிறுத்தப்பட்ட ஹங்கேரி இசை விழா

படம்: யுரோநியூஸ்

02 Aug 2026 - 9:28 pm

1 mins read

புடாபெஸ்ட்: ஹங்கேரியின் மத்தியப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை விழா ஒன்று திட்டமிடப்பட்டதைவிட முன்கூட்டியே முடிவடைந்துள்ளது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரில் இருவர் மாண்டதை அடுத்து ஏற்பாட்டாளர்கள் இசை விழாவை நிறுத்தினர்.

ஒரு வாரம் நடைபெறும் ஒஸொரா விழாவில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

அந்த வகையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 45 வயது அமெரிக்க ஆடவர் ஒருவர் அருகில் இருந்த உயரமான மேடையின்மீது ஏறி அங்கிருந்து கீழே குதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தில் உயரத்திலிருந்து குதித்ததாக அதிகாரிகளும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களும் நம்புகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் நேர்ந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று, ஹங்கேரியைச் சேர்ந்த 39 வயதுப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து அவர் உயிரிழந்தார்.

அந்தப் பெண் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து அனைத்து இசை நிகழ்ச்சிகளும் நள்ளிரவுடன் முடிவடையும் என்று ஏற்பாட்டாளர்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதுடன் மாண்டோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி நாள் முழுவதும் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி ஆகஸ்ட் 3ஆம் தேதி அதிகாலை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்