தோக்கியோ: பசியா, உடல்கோளாறா - குழந்தைகளின் அழுகை எதைக் குறிக்கிறது என்பதை அறிய ஜப்பானியர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திலான செயலிக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
குழந்தைகளிடம் இருந்து வரும் ஒலிகளைப் பெற்றோருக்கான வழிகாட்டுதல்களாக மொழிபெயர்க்கும் கருவிகளை விரிவுபடுத்தி வருகின்றனர் ஜப்பானிய மென்பொருள் நிபுணர்கள்.
சில வேளைகளில் குழந்தை எதற்காக அழுகிறது என்பது தெளிவாகத் தெரியாததால் பெற்றோர் கவலைப்படலாம். ஆரம்பக்காலக் குழந்தை பராமரிப்பிலுள்ள நிச்சயமற்ற தன்மையைச் சமாளிக்கக் குடும்பங்கள் புதிய வழிகளைத் தேடுகின்றன.
இந்நிலையில், குழந்தை சிரமப்படுவதற்கான காரணங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கருவிகளை நிபுணர்கள் அறிமுகப்படுத்துகின்றனர்.
அவற்றில் ஒன்றுதான் ‘பேபிலிங்குவல்’ (Babylingual) செயலி. தோக்கியோவுக்கு அருகிலுள்ள கனகாவா மாகாணத்தின் சிகசாகி நரைச் சேர்ந்த மோட்டோ நுமாசாவா என்னும் 25 வயதுத் தந்தை அதனைக் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார். அந்தச் செயலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
ஏப்ரல் மாத இறுதியில் அந்தச் செயலியை அவர் தமது மூன்று மாதக் குழந்தையிடம் சோதித்துப் பார்த்தார்.
சகு என்னும் பெயருடைய அந்தக் குழந்தையிடம் கைப்பேசியைக் காட்டியபோது சில நொடிகளில் ‘எனக்குப் பசிக்கிறது’ என்று ‘பேபிலிங்குவல்’ செயலி காட்டியது.
காலைச் சிற்றுண்டிக்குப் பின்னர் மூன்று மணி நேரம் கழித்து ‘இது உணவு ஊட்டும் நேரமாக இருக்கலாம்’ என்று அந்தச் செயலி யோசனை கூறியது. உணவு ஊட்டப்பட்டதும் அந்தக் குழந்தை தமது தாயின் கைகளில் சாய்ந்தவாறு உறங்கிவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
பசி, உறக்கம் போன்ற தங்களின் தேவைகளுக்கு ஏற்ப குழந்தைகள் தனித்துவமான குரல் ஒலிகளை எழுப்பும் என்று இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்ட ஆய்வில் கிடைத்த தகவல்களை ‘பேபிலிங்குவல்’ செயலி பயன்படுத்துகிறது.
குழந்தையின் அழுகையை அது ஐந்து வகைகளாக வகைப்படுத்துகிறது.

