தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வர்த்தகர் ஜோ லோவைத் தேடும் பணி தொடரும்: மலேசிய அதிகாரி

2 mins read
07ba377e-be5c-4622-81e7-0734ef62a889
தலைமறைவாகியுள்ள வர்த்தகர் ஜோ லோ. - படம்: த ஸ்டார்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

புத்ராஜெயா: 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் வர்த்தகர் ஜோ லோ அமெரிக்க நீதித் துறையுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது குறித்து மலேசியா அறிந்திருப்பதாகவும் தலைமறைவாகியுள்ள அவரைத் தேடும் பணியைக் கோலாலம்பூர் கைவிடாது என்றும் மலேசிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

1எம்டிபி சொத்துகளைப் பறிமுதல் செய்வது தொடர்பில் அமெரிக்க நீதித்துறையுடன் வர்த்தகர் லோ ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும் மலேசிய அதிகாரிகள் எக்காரணம் கொண்டும் தேடல் வேட்டையை நிறுத்தமாட்டார்கள் என்று கூறப்பட்டது.

“இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துகொண்டது பற்றி அறிந்திருக்கிறோம்.

“அந்த ஒப்பந்தத்தின்கீழ் 1எம்டிபி வழக்கில் தொடர்புடைய கூடுதலான சொத்துகள் மீட்கப்பட்டு மலேசியாவிடம் ஒப்படைக்கப்படும்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

அமெரிக்க நீதித்துறைக்கும் வர்த்தகர் லோவுக்கும் இடையில் எப்போது அத்தகைய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை வரையறுப்பதில் மலேசிய அதிகாரிகளுக்கும் பங்கு இருந்ததா என்பது குறித்தும் அவர் தெரிவிக்கவில்லை.

இது சொத்துகளை மீட்பதற்கான ஒப்பந்தம் என்று குறிப்பிட்ட அவர், வர்த்தகர் லோவைக் கண்டுபிடிக்கும்வரை அவரைத் தேடும் பணியை மலேசியா தொடரும் என்றார்.

ஜூன் மாதத் தொடக்கத்தில் அந்த ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டதாக சிஎன்ஏ கூறியுள்ளது.

1எம்டிபி விவகாரத்துடன் தொடர்புடையை சொத்துகளை அமெரிக்கா பறிமுதல் செய்வது தொடர்பில் நிரந்தரத் தீர்வு ஏற்பட இந்த ஒப்பந்தம் வகைசெய்யும் என்று தான் பார்வையிட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி சிஎன்ஏ கூறியது.

முன்னதாக, 1எம்டிபி தொடர்பான மேலும் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (S$136 மில்லியன்) பணத்தை மீட்கவிருப்பதாக அமெரிக்க நீதித் துறை ஜூன் 26ஆம் தேதி அறிவித்திருந்தது. அண்மைய ரகசிய ஒப்பந்தம் அந்த மீட்பு நடவடிக்கையுடன் தொடர்புடையது என்று கூறப்பட்டது.

வர்த்தகர் ஜோ லோ மீது கைதாணைகளுடன் ‘இன்டர்போல்’ எனப்படும் அனைத்துலகக் காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்