ஹொனலுலு: லாலா சூறாவளி காரணமாக அமெரிக்கத் தீவு மாநிலமான ஹவாயில் ஏராளமானோர் மின்சாரமின்றி இருட்டில் தவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) உள்ளூர் நேரம் பிற்பகல் 3.30 மணியளவில் கிட்டத்தட்ட 180,000 பேருக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை, மணிக்கு 80 மைல் (130 கி.மீ.) வேகத்தில் வீசிய காற்று பிறகு லாலா சூறாவளியாக வலுப்பெற்றது. தொடர்ந்து காற்றின் வேகம் மணிக்கு 91 மைல் என உச்சத்தை எட்டியது.
மறுநாள் பிக் தீவைத் தாக்கிய பிறகு வெப்பமண்டல புயலாக வலுவிழந்தது அந்தச் சூறாவளி.
அதனைத் தொடர்ந்து, அதிக மக்கள்தொகை கொண்ட ஓவாஹு தீவில் மின்வெட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிறு காலை நிலவரப்படி 220,000லிருந்து 130,000ஆகக் குறைந்துவிட்டதாக மாநில அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறினர்.
அதேவேளை, சூறாவளியால் குறைந்தபட்சம் 100 வீடுகள் சேதமடைந்ததாக தகவல்கள் வந்துள்ளதாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன் அன்றைய தினம் தெரிவித்தார்.
தேசிய சூறாவளி மையத்தின் ஆக அண்மைய தகவலின்படி, பிற்பகல் 2 மணி நிலவரப்படி, லாலா புயல் மணிக்கு 20 மைல் (31 கி.மீ.) வேகத்தில் தென்மேற்கு கவாய் மாவட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. புயல் எதிர்பார்த்த பாதையிலேயே சென்றதால், திங்கட்கிழமை காலை 8 மணிக்குள் ஹவாயி தீவுகளைக் கடந்து சென்றுவிடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
சூறாவளியால் வீசிய பலத்த காற்றில் மரங்கள் சாய்ந்ததாலும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாலும் மின் விநியோகப் பணிகள் பாதிக்கப்பட்டதாக ஹவாயி மின் விநியோக நிறுவனம் இதற்கு முன்னர் கூறியிருந்தது.
“நாங்கள் இதுவரை கண்டிராத அளவிலான திடீர் வெள்ளப்பெருக்கால் லாலா புயல் ஹவாயின் பல பகுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளது,” என்று மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


