ஹவானா: கியூபாவில் அக்டோபர் 20ஆம் தேதியன்று ‘ஆஸ்கார்’ புயல் கரையைக் கடந்தது.
இதற்கு முன்பு அக்டோபர் 18ஆம் தேதியன்று கியூபாவில் ஆகப் பெரிய மின் ஆலை முடங்கியது.
இதன் விளைவாக நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இருள் சூழ்ந்திருக்க, பேய்க் காற்றும் வீசி கியூபா மக்களுக்குச் சோதனை மேல் சோதனையை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே வானுயர் பணவீக்கத்துடன் உணவு, மருந்து, குடிநீர் தட்டுப்பாட்டினால் கியூபா மக்கள் அவதியுறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அக்டோபர் 21ஆம் தேதி மாலைக்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழக்கநிலைக்குத் திரும்பும் என்று கியூபா அரசு உறுதி அளித்துள்ளது.
மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சீறிய புயல், கியூபா நேரப்படி மாலை 5.50 மணி அளவில் கரையைக் கடந்ததாக அமெரிக்க தேசிய புயல் மையம் தெரிவித்தது.
புயல் வீசியபோது கியூபா தலைநகர் ஹவானாவின் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கியிருந்தன.
தொடர்புடைய செய்திகள்
ஹோட்டல்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களிலும் ஒரு சில வீடுகளிலும் மட்டுமே மின்சார விநியோகம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 17ஆம் தேதியன்று கியூபா பிரதமர் மேனுவல் மரேரோ அவசரநிலையைப் பிரகடனம் செய்தார்.
வீடுகளுக்கு மின்சார விநிநோகம் செய்வதற்கு முன்னுரிமை தரும் வகையில் அத்தியாவசியப் பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

