நோம் பென்: கம்போடியாவின் தென்பகுதியில் மாண்ட நோயாளியின் சடலத்துடன் 3 வயது சிறுமியையும் ஆள் நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில் சாலையோரம் விட்டுச் சென்றதாக உரிமம் இல்லா மருந்தகத்தின் உரிமையாளர்களான கணவன்-மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்தச் சிறுமி மாண்ட நோயாளியின் உறவினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 வயது நாம் சாந்தோவின் உடலை சாலையோரம் விட்டுச் சென்றதை 39 வயது சுன் மரினாவும் அவரது கணவரான ஹியேங் சொங்காக்கும் ஒப்புக்கொண்டனர்.
நவம்பர் 18ஆம் தேதியன்று நாம் சாந்தோவுக்கு மரினா ஊசி போட்டதாகவும் அதை அடுத்து, அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு மாண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அந்தத் தம்பதியரின் மருந்தகத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாம் சாந்தோவின் சடலத்தையும் அந்தச் சிறுமியையும் மரினாவும் அவரது கணவரும் தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வனப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு அவர்கள் அச்சடலத்தையும் சிறுமியையும் விட்டுச் சென்றனர்.
மரினா மீது கொலை செய்யும் நோக்கமில்லாமல் மரணம் விளைவித்தது, உரிமம் இல்லாமல் மருத்துவச் சேவை வழங்கியது, சடலத்தை மறைத்து வைத்தது, துன்புறுத்தலில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
உரிமம் இல்லாமல் மருத்துவச் சேவை வழங்கியதாகவும் சடலத்தை மறைத்து வைக்க உடந்தையாக இருந்ததாகவும் துன்புறுத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் மரினாவின் கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தம்பதியர் நடத்தி வந்த மருந்தகத்தை நவம்பர் 19ஆம் தேதியன்று கம்போடிய அதிகாரிகள் மூடினர்.

