தாய்லாந்தில் உள்ள மகாசரகம் மாகாணத்தை சேர்ந்தவர் பூண்டோம் சாய்மூன், 55. இவரது மனைவி அம்னுவாய் சாய்மூன், 49.
இவர்கள் இருவரும் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு காரில் சென்றனர். அதிகாலை 3 மணியளவில் காரை சாலையோரம் நிறுத்திய பூண்டோம் சிறுநீர் கழிக்க சென்றார்.
அங்கு பொதுக் கழிப்பறைகள் இல்லாததால் காரில் இருந்து இறங்கிய அம்னுவாய் அங்குள்ள காட்டுப்பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். ஆனால், அவர் காரில் இருந்து இறங்குவதை கவனிக்காத பூண்டோ, காரை ஓட்டிச் சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் சாலைக்கு திரும்பி வந்த அம்னுவாய் சாய்மூன் அங்கு காரும் தம்முடைய கணவரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்த பகுதியில் நின்ற அம்னுவாய் மிகவும் அச்சமடைந்தார்.
அவரது கைப்பேசியும் காரில் இருந்ததால் அவருக்கு உடனடியாக எந்த உதவியும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் ஏறக்குறைய 20 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று கபின்பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை காலை 5 மணிக்கு சென்றுசேர்ந்தார்.
அங்கிருந்து தொலைபேசி மூலம் கணவரை தொடர்புகொள்ள காவல்துறையினரின் உதவியை அவர் நாடினார். ஆனால் கணவரின் கைப்பேசி எண்ணும் அவருக்கு நினைவில் வரவில்லை. தன்னுடைய கைப்பேசி எண்ணுக்கே கிட்டத்தட்ட 20 முறை அழைத்தும் எதிர்முனையில் அழைப்பை ஏற்கவில்லை.
ஒரு வழியாக காலை 8 மணிக்கு காவல்துறையினரின் உதவியுடன் அம்னுவாய் தம்முடைய கணவரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடிந்தது. அப்போதுதான் பூண்டோமுக்கு தம்முடைய மனைவி காரில் இல்லை என்பது தெரியவந்தது.
மனைவி காரின் பின் இருக்கையில் அயர்ந்து தூங்குகிறார் என்ற நினைப்பிலேயே இருந்துவிட்டார். இடைப்பட்ட நேரத்தில் அவர் அங்கிருந்து கிட்டத்தட்ட 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோரத் மாகாணத்துக்கு சென்றுவிட்டார்.
காரைத் திருப்பி கபின்பூரி காவல் நிலையத்தை நோக்கி அவர் ஓட்டினார். அப்போது நடந்த செயலுக்காக அவர் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார்.
இப்படி ஒரு சோதனையைச் சந்தித்த பிறகும் அம்னுவாய் கணவரிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லையாம். தங்களுக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகவும் 26 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் அம்னுவாய் கூறினார்.

