மணிலா: ஹாங்காங்கில் பேசிய பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே, கைது நடவடிக்கைக்குத் தான் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற ‘போதைப்பொருள்களுக்கு எதிரான போர்’ தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) கைதாணை பிறப்பிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கைது செய்வதை ஏற்றுக்கொள்வதாக டுட்டர்டே கூறியுள்ளார்.
‘போதைப்பொருள்களுக்கு எதிரான போர்’ என்பது கடந்த 2016ஆம் ஆண்டில் ஒரு குற்றத்தைத் தடுக்கும் மேயராக டுட்டர்டேவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கான பிரசாரக் கொள்கையாகும்.
தற்போதைய அதிபர் ஃபெர்டினண்ட் மார்கோஸ் ஜூனியர் அலுவலகம், இன்டர்போல் என்ற அனைத்துலக காவல்துறையிடமிருந்து இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலும் பெறப்படவில்லை என்று திங்கட்கிழமை கூறியது.
ஆனால், டுட்டர்டேவை ஒப்படைப்போம் என்று அது சுட்டிக்காட்டியது.
“அனைத்துலக காவல்துறையின் வேண்டுகோளின்படி கைதாணை நிறைவேற்றப்பட வேண்டுமானால், சட்டம் என்ன சொல்கிறதோ அதனைப் பின்பற்ற எங்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் தயாராக உள்ளனர்,” என்று அதிபருக்கான தொடர்புத் துணைச் செயலாளர் கிளேர் காஸ்ட்ரோ செய்தியாளர்களிடம் கூறினார்.
சீன ஆட்சிக்கு உட்பட்ட ஹாங்காங்கில் டுட்டர்டே எவ்வளவு காலம் தங்குவார் என்பது குறித்து உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
வருகின்ற பிலிப்பீன்ஸ் இடைக்காலத் தேர்தல்களில் தனது செனட்டர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பிலிப்பீன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்ட பிரசாரப் பேரணியில் டுட்டர்டே பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
“அது (கைதாணை) உண்மை என்று வைத்துக்கொண்டாலும், நான் ஏன் அதைச் செய்தேன்? எனக்காகவா? என் குடும்பத்திற்காகவா? உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நமது தேசத்திற்காகவும்தான் செய்தேன்,” என்று பேரணியில் கூறிய டுட்டர்டே, தனது போதைப்பொருள் எதிர்ப்புப் பிரசாரத்தை நியாயப்படுத்தினார்.
ராய்ட்டர்ஸ் ஆதாரங்களின்படி, டுட்டர்டே தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு அருகே விஐபிக்களைப் பாதுகாப்பதற்கான ஹாங்காங் காவல் பிரிவு நிறுத்தப்பட்டிருந்தது.
டுட்டர்டே ஹாங்காங்கிற்குச் செல்வதன் மூலம் சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கக்கூடும் என்ற யூகத்தை பிலிப்பீன்ஸ் அதிபர் அலுவலகம் நிராகரித்தது. அதேநேரத்தில் சட்ட செயல்முறை அதன் போக்கில் செல்ல அனுமதிக்குமாறு டுட்டர்டேயின் ஆதரவாளர்களிடம் அது கேட்டுக் கொண்டுள்ளது.

