சோல்: தென்கொரியாவின் தலைநகரான சோலில் 30 வயது ஆடவர் ஒருவர் தன்னைக் காவல்துறை அதிகாரியாக அடையாளப்படுத்திக்கொண்டு, பிரபலமான சமூக ஊடகத்தில் பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரை செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கைது செய்ததாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது. அந்த ஆடவர்மீது ‘பிலைண்ட்’ என்னும் சமூக ஊடகத்தில் தவறான பதிவிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“நான் கங்னம் ரயில் நிலையத்தின் வெளியேறும் வாயில் எண் ஒன்றின் அருகே இருக்கும் மக்களைக் கத்தியால் குத்தப்போகிறேன். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நான் எல்லோரையும் கொல்லப் போகிறேன்,” என அந்த ஆடவர் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட்ட போதிலும் அது புகைப்படமாக இணையத்தில் விரைவாகப் பரவியது.
காவல்துறை விசாரணையில் அந்த ஆடவர் காவல்துறை அதிகாரி இல்லை எனத் தெரிய வந்துள்ளது.
காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர்மீது காவல்துறை அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்ததற்காகவும் வழக்குப்பதிவு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

