சோல்: தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தென்கொரிய அதிபர் யுன் சுக் இயோல், முழு ஜனநாயக முறையில் தான் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாக நீதிமன்ற விசாரணையின்போது கூறியுள்ளார்.
திரு யூன் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணையின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 21) அவர் அவ்வாறு சொன்னார். சில மணிநேரத்துக்கு நீடித்த ராணுவ ஆட்சி சட்டத்தை திரு யூன் அமல்படுத்தியதையடுத்து அவர் மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்துவதற்குச் சாதகமாக நாடாளுமன்ற வாக்கெடுப்பு முடிவுகள் அமைந்தன.
“இளம் பருவத்திலிருந்தே நான் முழு ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்துக்கொண்டு வருகிறேன். குறிப்பாக எனது அரசியல் வாழ்க்கைக்கு அது பொருந்தும்,” என்றார் திரு யூன்.
“அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் அமைப்பு என்ற முறையில் நீதிபதிகள் அதை நன்கு கவனித்துக்கொள்வர் என நான் நம்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று திரு யூன் ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்தினார். அதற்குப் பிறகு அவர் முதன்முறைாக பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

