மலேசியாவில் 62 வயது பெண் 28 வயது ஆடவருக்கு திருமணம்

மலேசியாவில் 62 வயது பெண் 28 வயது ஆடவருக்கு திருமணம்

14 Jun 2023 - 7:29 pm

1 mins read

காதலுக்கு வயது வரம்பு இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளார் மலேசியாவைச் சேர்ந்த 62 வயது ரோகியா சமாத்.

திருமதி சமாத் தம்மை விட 34 வயது இளையவரான முகமது அமின் ஜுன்டையை (28) 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு மேலாக அமினுடன் பழகிய பிறகு அவரை மணந்தார் ரோகியா.

தம்மைவிட கணவர் இளையவராக இருந்தாலும் கடைசி வரை பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை இருப்பதாகவும், இதுவே எனது கடைசி திருமணமாக இருக்கட்டும் என்றும் ரோகியா கூறினார்.

உடற்பிடிப்பு பணி செய்யும் அமீன் டிக்டாக் மூலம் ரோகியாவுடன் நட்பு கொண்டார். அதன் பின்னர் அது காதலாக மாறியது.

சபாவில் உள்ள அமீன் தமது காதலுக்காக ஜோகூருக்கு இடமாறினார். ரோகியா கெளந்தானைச் சேர்ந்தவர்.

இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்தனர்.

தம்பதி நான்கு நாள்களுக்கு முன்னர் அவர்களது திருமண காணொளியை டிக்டாக் தளத்தில் பதிவேற்றினர். அது கிட்டத்தட்ட 2.4 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

ரோகியாவுக்கு 10 பிள்ளைகள், 22 பேரப்பிள்ளைகள், ஒரு கொள்ளுப்பேரன் உள்ளனர்.

ரோகியாவுக்கு 1977ஆம் ஆண்டு முதல் திருமணம் நடந்தது. 40 ஆண்டுகள் தமது முதல் கணவருடன் வாழ்ந்த பிறகு மணவிலக்கு பெற்றார்.

அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு மியன்மாரைச் சேர்ந்த ஆடவரை ரோகியா திருமணம் செய்தார். அத்திருமணம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகாதல்