டாக்கா: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவை ஒப்படைத்தால்தான் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளப்போவதாகப் பங்ளாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டு, பங்ளாதேஷில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடுத்து திருவாட்டி ஹசினா நாட்டைவிட்டு தப்பியோடினார்.
ஹசினாவின் அரசாங்க ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்காகப் பங்ளாதேஷ் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. அதன்படி ஹசினாவைத் திரும்ப ஒப்படைக்கும்படி இந்தியாவிடம் பங்ளாதேஷ் கோரிவருகிறது.
இந்நிலையில், இந்தியாவுக்குத் திரு ரஹ்மான் அடுத்த வாரம் செல்லவிருப்பதாக எழுந்த வதந்திகள் குறித்து பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஏ.கெ.எம். ஷாஹிதுல் கரிம் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) பேசினார்.
அந்தப் பயணம் இடம்பெறுவதற்கு உகந்த சூழல் உருவாகவேண்டும் என்று கரிம் கூறினார்.
இதற்கிடையே, ஹசினாவை ஒப்படைக்கும்படி முன்வைக்கப்பட்ட பங்ளாதேஷின் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக இந்தியா தெரிவித்தது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் பொறுப்பேற்ற ரஹ்மான், பங்ளாதேஷ் பிரதமராக மலேசியாவுக்கும் சீனாவுக்கும் முதல் பயணத்தை மேற்கொண்டார்.
புதிதாகப் பதவியேற்கும் பங்ளாதேஷ் பிரதமர்கள் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா செல்வது வழக்கம்.
இந்நிலையில், பங்ளாதேஷிற்கான இந்தியத் தூதர் தினேஷ் திரிவேதி பிரதமர் ரஹ்மானைக் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். அது இந்தியப் பயணம் குறித்த ஊகங்களை அதிகரித்தது.
ரஹ்மானின் உத்தேச இந்தியப் பயணம் குறித்து பங்ளாதேஷ் அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் அண்மை வாரங்களில் தொடர்பில் இருப்பதாகவும் கரிம் தெரிவித்தார்.
ஜனநாயகத்துக்கு ஆதரவான முன்னாள் தலைவரான ஹசினா, சிறையில் அடைக்கப்பட்டாலும் டிசம்பர் மாதத்தில் பங்ளாதேஷ் திரும்பப்போவதாக இதற்குமுன் தெரிவித்திருந்தார்.


