ஜோகூர் பாரு: ஆக அதிக காலம் மலேசியப் பிரதமராகப் பதவி வகித்த மகாதீர் முகம்மது, பிஎன் எனும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைத்தால் தாம் மூன்றாவது முறையாகப் பிரதமர் பதவியை வகிக்கப்போவதில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
தாம் ஆலோசகராக இருப்பதற்கு மட்டும் விரும்புவதாக டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.
100 வயது ஆகிவிட்ட வேளையில் தம்மால் இனி முன்னின்று வழிநடத்த முடியாது என்று டாக்டர் மகாதீர் சொன்னதாக மலாய் மொழி ஊடகமான சினார் ஹரியான் தெரிவித்தது. அதேவேளை, தமது 80 ஆண்டுகால அரசியல் அனுபவத்தைக் கொண்டு தம்மால் அரசாங்கத்துக்குப் பங்காற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எனக்கு 100 வயதாகிவிட்டது. முன்பு போல் என்னால் வீராவேசமாக உரையாற்ற முடியாது. இளையர்களின் இடத்தை நான் பிடிக்க விரும்பிவில்லை. இருமுறை பிரதமராகப் பொறுப்பு வகித்துவிட்டேன். அது போதும்.
“24 ஆண்டுகளாகப் பிரதமர் பதவி வகித்ததுடன் அரசியலில் 80 ஆண்டுகள் ஈடுபட்டுள்ளதால் என்னால் இன்னும் ஆலோசனை வழங்க முடியும்,” என்று கெடா மாநிலத் தலைநகர் அலோர் சிட்டாரில் உள்ள சுக்கா மெனான்டி விளையாட்டரங்கில் நடந்த கூட்டம் ஒன்றில் டாக்டர் மகாதீர் பேசினார்.