பெங்களூரு: ஐபிஎம் நிறுவனம், நடப்பு காலாண்டில் வேலைகளைக் குறைக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) அறிவித்தது. இதனால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்கக்கூடும்.
அதிக லாபம் தரும் மென்பொருள் பிரிவில் ஐபிஎம் கவனம் செலுத்துவதே இதற்குக் காரணம்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான மேகக் கணினித் தேவைகளிலிருந்து பயனடைய ஐபிஎம் நிறுவனத்தின் திறனை வால் ஸ்திரீட் உன்னிப்பாகக் கவனித்து வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
“எங்கள் உலகளாவிய ஊழியரணியில் மிகக் குறைவான விழுக்காட்டினரை இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை பாதிக்கும்,” என்று ஐபிஎம் வெளியிட்ட ஓர் அறிக்கை கூறியது.
வணிகங்களுக்கு தொழில்நுட்ப வசதிகளை வழங்கும் ஐபிஎம், ஆட்குறைப்பு செய்து செயற்கை நுண்ணறிவில் கூடுதல் முதலீடு செய்யப் போட்டியிடும் முன்னணி நிறுவனங்களான அமேசான், மெட்டா, கூகல் உள்ளிட்டவற்றின் வரிசையில் இணைந்துள்ளது.
2024 இறுதி நிலவரப்படி, ஏறக்குறைய 270,000 ஊழியர்கள் ஐபிஎம் நிறுவனத்துக்காக வேலை செய்தனர்.

