உலகின் மிகப் பரபரப்பான எல்லையாக சிங்கப்பூர்-மலேசியா கடற்பாலம் அமைந்துள்ளது.
இருபக்கத்திலும் அந்த கடற்பாலத்தை 2.1 மில்லியன் வருகையாளர்கள் சிங்கப்பூரின் தேசிய தின (ஆகஸ்ட் 9) வாரயிறுதியான ஆகஸ்ட் 7 முதல் 10 ஆம் தேதிவரை கடந்து சென்றுள்ளனர்.
குடிநுழைவு செயல்பாடுகளைக் கடந்து இருநாடுகளுக்கும் மிகவும் அணுக்கமான உறவுகளும் தொடர்புகளும் பல துறைகளில் அமைந்துள்ளன. பல அம்சங்களில் சிங்கப்பூரும் மலேசியாவும் ஒருங்கிணைந்து செயலாற்றுகின்றன.
“என்றென்றும் அண்டை நாடுகள், என்றென்றும் ஒன்றிணைந்து செயலாற்றும் நண்பர்கள்,” என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் இருநாட்டு உறவுகள் குறித்து கருத்துரைத்தார். அவர் அண்மையில் மலேசியாவின் பாகாங், திரங்கானு மாநிலங்களுக்கு நான்கு நாள் பயணமாகச் சென்றிருந்தபோது அக்கருத்தை வெளியிட்டார்.
அதற்கு ஏற்றாற்போல, சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) மலேசியாவின் ஜோகூர் கடற்பால எல்லையில் செயலாற்றும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகவைக்கு (ஏகேபிஎஸ்) அந்நாட்டு தேசிய தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) கேக் வழங்கி அதன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது.
இரு நாட்டுக் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் அமைப்புகளும் தத்தம் தேசிய தினங்களில் மறுபக்கத்துக்கு எல்லை கடந்து வந்து கேக் வழங்கி சக அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பது 2023ஆம் ஆண்டுமுதல் ஒரு வழக்கமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


