நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காரில் குழந்தையுடன் இருந்த ஆடவரை அமெரிக்கக் குடிநுழைவு (ஐஸ்) அதிகாரிகள் சுட்டுக் காயப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் வியாழக்கிழமை (அக்டோபர் 8) மார்பல் ஹில் குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்ததாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி, காவல்துறை, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஆகியோர் தெரிவித்தனர்.
திரு டோனல்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து மத்தியக் குடிநுழைவு அதிகாரிகள் இதுவரை குறைந்தது 21 பேரைச் சுட்டுவிட்டனர். அதனால் அமெரிக்கா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அவர்களில் எழுவர் இறக்க நேரிட்டது.
மக்கள் நாடுகடத்தப்படுவதை திரு டிரம்ப் தீவிரப்படுத்துவதால் வன்முறை கலந்த மோதல்கள் அதிகரித்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்த பலர் நாடுகடத்தப்படவேண்டும் என்று திரு டிரம்ப் கூறிவருகிறார். அமெரிக்காவில் பல நிதி மோசடிகள், வன்முறை சம்பந்தப்பட்ட குற்றங்கள் ஆகியவற்றுக்கு காரணம் அவர்களே என திரு டிரம்ப் குற்றஞ்சாட்டிவருகிறார்.
நியூயார்க்கில் நிகழ்ந்த சம்பவத்தில் காரில் இருந்த குழந்தையின் உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று மேயர் மம்தானி தெரிவித்தார். குழந்தை நலமாக இருப்பதைத் தெரிந்தகொள்வதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகு அது குடும்பத்தார் ஒருவருடன் இருந்ததை நியூயார்க் காவல்துறைப் பிரிவு தெரிந்துகொண்டது.
