14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம்; அவசரநிலையை அறிவித்த நாடு

14 மணி நேரத்தில் 800 முறை நிலநடுக்கம்; அவசரநிலையை அறிவித்த நாடு

1 mins read
5e0a10f1-7034-4cae-98b9-67723704f946
ஃபாக்ரடல்ஸ்ஃபியல் எரிமலையிலிருந்து குழம்பு வெளிப்படும் நிலையில், வானில் தோன்றும் செவ்வொளி. - கோப்புப்படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ரெய்க்யவிக்: அடுத்தடுத்து பலமுறை ஆற்றல்மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஐஸ்லாந்து வெள்ளிக்கிழமை அவசரநிலையை அறிவித்தது.

இது எரிமலை குமுறுவதற்கு முன்னோட்டமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது,

இதனையடுத்து, ஐஸ்லாந்தின் தென்மேற்குப் பகுதியிலுள்ள கிரிண்டவிக் ஊர்வாசிகள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏறக்குறைய 4,000 பேர் வசித்து வருகின்றனர். அவ்வூருக்கான எல்லாச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை தொடர் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தொலைவில் கிரிண்டவிக் அமைந்துள்ளது.

தலைநகர் ரெய்க்யவிக்கிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இருமுறை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஐஸ்லாந்தின் தென்கடலோரப் பகுதியிலுள்ள வீடுகளில் சன்னல்களும் மற்றப் பொருள்களும் ஆடின.

பெரிய நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 எனப் பதிவானதாக ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

ஐஸ்லாந்தின் தென்மேற்கு வட்டாரத்தில் கடந்த அக்டோபர் முதல் 24,000 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக அம்மையம் குறிப்பிட்டது.

அதிலும் குறிப்பாக, வியாழக்கிழமை நள்ளிரவிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் கிட்டத்தட்ட 800 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அது தெரிவித்தது.

நிலத்திற்கு அடியில் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் எரிமலைக் குழம்பு ஒன்றுதிரண்டு வருகிறது என்றும் அது மேல்நோக்கிக் கிளம்பினால் எரிமலை வெடிக்கக்கூடும் என்றும் மையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்