கெய்ரோ: அமெரிக்கப் படைகள் மீண்டும் தாக்குதல் தொடுத்தால் உறுதியான பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானிய இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அதையடுத்து, அமெரிக்காவின் எந்தவொரு ‘துணிகரச் செயலுக்கும்’ பதிலடி தரப்படும் என்று ஈரானும் எச்சரித்துள்ளது.
குவைத் எல்லைக்குள் ஊடுருவிய ஈரானிய ஆளில்லா வானூர்திகளை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அதன்பின் சில மணி நேரங்களிலேயே, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அவர் ஆகஸ்ட் 1ஆம் தேதி துருக்கி, பாகிஸ்தான், சவூதி அரேபிய உயரதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாகப் பேசினார். பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர், துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிதான் ஆகியோருடன் பேசிய அராக்சி, அமெரிக்காவின் நடவடிக்கைகளால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது குறித்து விவாதித்தார்.
சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹானிடம் பேசிய அராக்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
மேலும், ஈரானிய எரிசக்தித் தளங்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டால் சவூதி, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார், இஸ்ரேல் ஆகிய வட்டார நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தளங்கள் சாம்பலாக்கப்படும் என்று ஈரானிய உச்ச பாதுகாப்பு அமைப்பின் ஊடகப் பிரிவான நூர்நியூஸ் எச்சரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றம்
அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் இவ்வாண்டு பிப்ரவரி 28 தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து அனைத்துலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஜூலை மாதத்தில் மட்டும் 24 விழுக்காடு கூடியது.
இதற்கிடையே, ஓமான் கடற்பகுதியில் இரு கப்பல்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் வணிக அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், செங்கடலின் பாப் எல்-மந்தெப் நீரிணைப் பகுதியிலும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி அமைப்பினர் அச்சுறுத்தலைத் தொடங்கியுள்ளனர்.
ஈரானும் அதன் கூட்டணி அமைப்புகளும் விடுத்துள்ள இந்தத் தொடர் அச்சுறுத்தல்களால், மத்திய கிழக்கு வட்டாரத்தில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இதனால், இரு முக்கிய அனைத்துலகக் கடல்வழிப் பாதைகலான செங்கடலிலும் ஹோர்முஸ் நீரிணையிலும் அச்சுறுத்தல் நிலவுவதால், உலகளாவிய எரிபொருள் விநியோகம் பெரும்பாதிப்புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது.

