வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனங்கள்மீது மின்னிலக்கச் சேவை வரியை விதிக்கும் அனைத்து நாடுகள்மீதும் 100 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அமெரிக்க நிறுவனங்கள்மீது மின்னிலக்கச் சேவை வரியை உடனடியாக விதிப்பது குறித்து பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கலந்துரையாடுகின்றன,” என்று திரு டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார்.
அவற்றுள் சில நாடுகள் கூடிய விரைவில் அந்த வரியை விதிக்கக்கூடிய நிலையில் இருப்பதாக அவர் சொன்னார்.
நூறு விழுக்காட்டு வரி விதிப்பின்போது இதற்குமுன் செய்துகொள்ளப்பட்ட வர்த்தக உடன்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றும் திரு டிரம்ப் எச்சரித்தார்.
அவற்றுள், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த ஆண்டு செய்துகொண்ட உடன்பாடும் அடங்கும் என்றார் அவர்.
அமெரிக்காவின் தொழில்துறைப் பொருள்கள்மீதான வரியை முழுமையாக நீக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்மீது அதிகபட்சம் 15 விழுக்காட்டு வரி மட்டுமே விதிக்கப்படும் என்று அந்த உடன்பாடு குறிப்பிடுகிறது.
கடந்த வாரம், ஜி7 உச்சநிலை மாநாட்டுக்கு இரண்டு மணிநேரங்களுக்குமுன் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன், திரு டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபனிந்து அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள்மீதான மின்னிலக்க வரியை நீக்கப்போவதில்லை என்றார்.
இணைய விற்பனைத் தளங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றுக்கும் மின்னிலக்கச் சேவை வரியை பிரான்ஸ் விதிக்கவிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, பிரான்சில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டிற்குப் புறப்படும்முன் பேசிய திரு டிரம்ப், பிரெஞ்சு மதுபானத்திற்கு 100 விழுக்காட்டு வரிகளை அறிமுகம் செய்வதைத் தவிர அமெரிக்காவிற்கு வேறு வழியில்லை என்றார்.
மின்னிலக்கச் சேவைகள் மூலம் 25 மில்லியன் யூரோவுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நிறுவனங்கள்மீது 2019ஆம் ஆண்டிலிருந்து 3 விழுக்காட்டு வரியை பிரான்ஸ் விதித்துவருகிறது.
அந்த வரியை 6 விழுக்காட்டிற்கு உயர்த்த பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஆண்டு பரிந்துரைத்தனர்.

