கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், வளரும் நாடுகளை ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து நியாயமற்ற முறையில் நடத்தினால் வளரும் நாடுகள் தங்களுக்குப் பொருத்தமான மாற்று நாடுகளை நாட வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
நார்வே நாட்டோடு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான விவகாரம் ஒன்றைச் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாதுகாப்புத் துறை கொள்முதல் ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் 95 விழுக்காட்டுத் தொகையை மலேசியா ஏற்கனவே செலுத்திவிட்டதாகக் குறிப்பிட்ட திரு அன்வார், இது குறித்துப் பலமுறை விளக்கம் கேட்டும் நார்வேயிடமிருந்து திருப்திகரமான பதில் எதுவும் வரவில்லை என்றார்.
இந்தச் சம்பவம், மலேசியாவின் எதிர்கால முடிவுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.,
ரஷ்யாவின் ‘ஆர்டி’ தொலைக்காட்சி ஊடகத்திற்கு அளித்த தனிப்பட்ட நேர்காணலில் அவர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
“ஐரோப்பிய நாடுகள் எங்களை நேர்மையற்ற முறையில் நடத்தினால் மற்ற நாடுகள் இதைப் பார்த்தும் அமைதி காக்கும் பட்சத்தில், நாங்கள் மாற்று வழிகளைத்தான் தேட வேண்டும். அவர்களுடன் நாங்கள் வணிகம் செய்ய வேண்டிய அவசியமில்லை,” என்றார் பிரதமர் அன்வார்.
கப்பற்படைத் தாக்குதல் ஏவுகணை அமைப்பிற்கான ஏற்றுமதி உரிமத்தை நார்வே அரசு கடந்த மார்ச் மாதம் திடீரென ரத்து செய்தது. உணர்திறன்மிக்க ராணுவத் தொழில் நுட்பங்களின் ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை அது தீவிரமாக்கியது. ஏவுகணைகள் விநியோகம் செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இத்தகைய ஒருதலைப்பட்சமான முடிவால் ஏவுகணைக் கொள்முதலில் மட்டும் மலேசியாவிற்கு நேரடியாக 600 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மறைமுகச் செலவுகள் ஒரு பில்லியன் ரிங்கிட்டைத் தாண்டக்கூடும் என்றும் தற்காப்பு அமைச்சர் முகமது காலிட் நூர்தீன் கடந்த ஜூன் 2ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இவ்விவகாரத்தின் பின்னணியில் நேட்டோ அமைப்போ அமெரிக்காவின் தலையீடோ இருக்கலாம் என்று மலேசியா தொடக்கத்தில் சந்தேகித்ததாகத் திரு அன்வார் கூறினார்.
இது குறித்துத் தாம் நார்வே பிரதமருடன் பேசியதாகவும் அவர் அதற்கு வருத்தம் தெரிவித்த போதிலும், நாட்டின் பாதுகாப்பு நலன்களைக் காரணம்காட்டியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இவ்விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய மலேசியா தூதரக ரீதியாகத் தொடர்பு கொண்டபோது, இதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று வாஷிங்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர்கள் ஏதோ எங்களை ஒரு பலவீனமான நாடுபோல நடத்துகிறார்கள். இது அவர்களின் முழுமையான அறியாமையையும் ஆணவப் போக்கையும்தான் காட்டுகிறது. இதற்கு நாங்கள் எங்களது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளோம், இத்துடன் இது முடிந்துவிடாது,” என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

