இந்த ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் ‘பிஎன்’ அதற்குத் தயார்: அனுவார் மூசா

இந்த ஆண்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் ‘பிஎன்’ அதற்குத் தயார்: அனுவார் மூசா

2 mins read
f53e2d92-774d-49a9-bdc1-e374d1e7cc95
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா. - படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோத்தா பாரு: இந்த ஆண்டு 16வது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாலும், அதன் தேர்தல் நடவடிக்கைகள் அனைத்து மட்டங்களிலும் ஏற்கெனவே முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டரசுப் பிரதேச நிலையிலும் மாநில நிலையிலும் அரசியல் முன்னேற்றங்களைக் கவனிக்கும்போது, இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவது சாத்தியம் என்று அக்கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா கூறினார்.

பல மாநிலத் தேர்தல்கள் சம்பந்தப்பட்ட முன்னேற்றங்கள் குறைந்தது நான்கு மாநிலங்களாவது தேர்தலை நோக்கி நகர்வதைக் காட்டுவதாக அவர் கூறினார்.

“எனவே, பாஸ் துணைத் தலைவர் முகமது அமர் நிக் அப்துல்லாவின் கணிப்பு சாத்தியமற்றது அல்ல,” என்று அவர் வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 19) செய்தியாளர்களிடம் கூறினார்.

பாஸ் துணைத் தேர்தல் இயக்குநராகவும் இருக்கும் அனுவார், கடந்த பொதுத் தேர்தலிலிருந்து ‘பிஎன்’ கூட்டணி மற்றும் பாஸ் கட்சி ஆகியவை தொடர்ச்சியாகத் தேர்தல் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

பாஸ் கட்சியின் மத்திய தேர்தல் பிரிவு, மாநிலத் தேர்தல் பிரிவுகள், நாடாளுமன்றத் தேர்தல் துறைகள், தொகுதி அளவிலான தேர்தல் பிரிவுகள் அனைத்தும் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன என்றார் அவர்.

உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களின் தயார்நிலையை உறுதி செய்வதற்காக, தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் ஒத்திகைகளும் நிறைவடைந்துவிட்டதாக அவர் மேலும் கூறினார்.

“தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த ஆண்டு அக்டோபர் இறுதிக்கும் நவம்பருக்கும் இடையில் 16வது பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக புதன்கிழமையன்று திரு முகமது அமர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றத் தேர்தல்அரசியல்கட்சி