கோலாலம்பூர்: ராணுவ அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் அது நாட்டின் பாதுகாப்புக்குப் பேராபத்தை ஏற்படுத்தும் என்று மலேசியத் தற்காப்பு அமைச்சர் காலித் நூர்தீன் புதன்கிழமையன்று (ஜனவரி 28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊழலற்ற ராணுவம் உருவாக்கப்படும் என்று அவர் சூளுரைத்தார்.
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் தப்பிக்க முடியாது என்றும் அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் காலித் கூறினார்.
அண்மையில் மலேசியாவின் முன்னாள் ராணுவத் தளபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இதன் காரணமாக நேர்மை மற்றும் கட்டொழுங்குமிக்க அமைப்பாக இருக்க வேண்டிய ராணுவத்தின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை சற்றுக் குறைந்திருப்பதாகத் திரு காலித் தெரிவித்தார். ராணுவத்தின் மீது பொதுமக்களுக்கு முன்பிருந்த நம்பிக்கை திரும்புவது அவ்வளவு எளிதன்று என்றார் அவர்.
“தற்காப்பு அமைச்சர் என்கிற முறையில், நடந்தது எதையும் நான் மூடி மறைக்கப்போவதில்லை. அவ்வாறு செய்யமாட்டேன், செய்யக்கூடாது. எனவே திறந்த மனத்துடன், பொறுப்புணர்வுடன் நாடாளுமன்றத்தில் இதுகுறித்துப் பேசுகிறேன்,” என்று அமைச்சர் காலித் கூறினார்.
ராணுவ அதிகாரிகள் ஊழலில் ஈடுபடும்போது அதை வெறும் பணம் கையாடல், அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் திரு காலித் தெரிவித்தார்.
ஊழலில் ஈடுபடும் ராணுவத்தினருக்குத் தற்காப்பு அமைச்சு பாதுகாப்பு வழங்காது என்றார் அவர்.
தற்காப்பு அமைச்சின் நிர்வாக முறை, கொள்முதல் செயல்முறைகள் ஆகியவை முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் காலித் தெரிவித்தார்.
இதை இலக்காகக் கொண்டு ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்ட சீர்திருத்த உத்தியைத் தற்காப்பு அமைச்சு அறிவித்தது.

