கிரீன்லாந்தை அமெரிக்கா தாக்கினால் நேட்டோ கூட்டமைப்பு அழியும்: டென்மார்க்

2 mins read
503b623f-a9b0-4963-954f-81c0d607b07b
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (இடது), டென்மார்க் பிரதமர் மெட்டி ஃபிரடெரிக்சன். - படம்: ஏஎஃப்பி

கோப்பன்ஹேகன்: டென்மார்க் ஆட்சி செய்யும் கிரீன்லாந்து தீவின்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதோடு நேட்டோ கூட்டமைப்பின் அழிவு நிச்சயமாகும் என்று அந்நாட்டுப் பிரதமர் மெட்டி பிரடெரிக்சன் எச்சரித்துள்ளார்.

டென்மார்க்கின் டிவி2 ஊடகம் ஒளிபரப்பிய நேர்காணலில் திருவாட்டி பிரடெரிக்சன் அந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு தேவை என்று அமெரிக்க அதிபர் குறிப்பிடுவதைத் தாம் முக்கியமாகக் கருதுவதால், நேட்டோ உறுப்பினராக உள்ள ஒரு நாட்டை அது தாக்கினால், அந்த அமைப்பின் செயல்பாடு அர்த்தமற்றுப்போய் விடும் என்று தெளிவுபடுத்தினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பியத் தற்காப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நேட்டோ கூட்டமைப்பின் நோக்கமும் அழிந்துவிடும் என்று அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பை காரணம்காட்டி, சில நாட்களுக்கு முன்பு வெனிசுவேலாவை தாக்கிய அமெரிக்காவின் நடவடிக்கையை மேற்கோள்காட்டி டென்மார்க் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என்று அதிபர் டிரம்ப் அடிக்கடி கூறிவந்துள்ளார். ஆனால் கடந்த ஜனவரி 5ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “இரண்டு மாதங்களில் கிரீன்லாந்தைப் பற்றி கவலைப்படுவோம், 20 நாள்களில் பேசுவோம்,” என்று காலக்கெடுவை நிர்ணயித்தார்.

கிரீன்லாந்து குறித்து அமெரிக்க அதிபர் செயல்படுத்த முயலும் திட்டத்தைக் கடுமையாகச் சாடினார் டென்மார்க் பிரதமர். அதிபர் டிரம்ப் அவரது மிரட்டல்களை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று திருவாட்டி பிரடெரிக்சன் பதிலடி கொடுத்துள்ளார்.

டேனிஷ் பேரரசின் மூன்று அங்கங்களில் ஒன்றாக கிரீன்லாந்து விளங்குகிறது. இதர இரண்டு இடங்களான டென்மார்க்கும் ஃபாரோ தீவுகளின் கூட்டமைப்பும் அதன் ஆட்சிக்கு உட்பட்டவை. வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) உறுப்பு நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று. ஆகவே நேட்டோ நாடுகள் அவற்றின் ஆதரவை டென்மார்க்கிற்கு வழங்கியுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு அதிபராக இருந்தபோதே திரு டிரம்ப் கிரீன்லாந்துத் தீவை வாங்கும் யோசனையை முன்வைத்தார். தற்போது மீண்டும் அமெரிக்க அதிபரானதும் அவர் அத்திட்டத்தை கையிலெடுத்துள்ளார். கடந்த 2025 டிசம்பர் மாதம் டென்மார்க் உளவுத் துறை அமெரிக்காவை பாதுகாப்புக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நாடாக வகைப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்