கோலாலம்பூர்: நாட்டின் மிகப்பெரிய சுகாதாரச் சேவை வழங்குநர்களில் ஒன்றான ‘ஐஎச்எச் ஹெல்த்கேர் மலேசியா’ நிறுவனம், சிகிச்சைத் திறனை மேம்படுத்துவதையும், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு ஜோகூரில் ஒரு புதிய பராமரிப்பு மாதிரியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் கிடைக்கும் சேமிப்புகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
ஐஎச்எச் ஹெல்த்கேர் மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் கமல் அம்சான் கூறுகையில், இந்த முயற்சியின் மூலம், இஸ்கந்தர் புத்ரியில் உள்ள மெடினி பகுதியில் அமைந்துள்ள ‘அஃபினிட்டி வெல்னஸ்’, கிளனிகிள்ஸ் மருத்துவமனை ஜோகூருக்கான ஒரு பிரத்தியேக வெளிநோயாளி பராமரிப்பு மையமாக உருவாக்கப்படும் என்றார்.
ஒரு நாளில் முடிக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட சிகிச்சைகளை இந்த மையம் கையாளும் என்றும் இது மிகவும் சிக்கலான சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குப் பிரதான மருத்துவமனை கவனம் செலுத்த வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
“இத்தகைய பகல்நேர மருத்துவச் சிகிச்சைகளை ஒரு பிரத்தியேக மையத்தில் மேற்கொள்ளும்போது, நிர்வாகச் செலவுகள் நிச்சயமாகக் குறையும். இந்த மையங்கள் 24 மணி நேரமும் செயல்படப்போவதில்லை.
“பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும் என்பதால், நிர்வாகச் செலவுகளைக் குறைத்து, அதன் மூலம் கிடைக்கும் சேமிப்பை மலேசிய மக்களுக்கு மீண்டும் வழங்க முடியும்,” என்று அவர் சனிக்கிழமை (அக்டோபர் 17) பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
இந்தப் புதிய பராமரிப்பு மாதிரிக்கான முன்னோடி இடமாக ஜோகூர் செயல்படுகிறது என்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோலாலம்பூரிலும் இதுபோன்ற வெளிநோயாளி பராமரிப்பு மையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் வளர்ச்சிக்கு ஜோகூர் தயாராகி வருவதால் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. இது ஜோகூர்-சிங்கப்பூர் வர்த்தகப் பாதையில் எல்லை தாண்டிய இயக்கம், திறமை ஓட்டம், வட்டார சுகாதாரத் தேவை ஆகியவற்றை விரைவுபடுத்த அமைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் வட்டாரத்தில் இருந்து அனைத்துலக நோயாளிகள், எல்லை தாண்டிய நடமாட்டத்தை ஆதரிப்பதற்காக, ஜோகூர் கிளனிகிள்ஸ் மருத்துவமனை விசா செயலாக்கம், தங்கும் வசதி, பயணத் தளவாடங்களுக்கு ஒரே இடத்தில் சேவைகளை வழங்கும் பிரத்தியேக அனைத்துலக நோயாளி ஓய்வறையை நிறுவியுள்ளது.
