வாஷிங்டன்: அமெரிக்கா தாக்கிய ஈரானின் தளங்களில் அணுவாயுதத் திட்டங்கள் இருந்ததாக அதிபர் டோனல்ட் டிரம்ப் நாடாளுமன்றத்தில் இந்த வாரம் தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்க உளவு அமைப்புகள் அத்தகைய திட்டங்கள் இருக்கவில்லை என்றன.
திரு டிரம்ப்பின் முரணான கருத்து இம்மாதம் 22ஆம் தேதி ஈரான்மீது தாக்குதல் நடத்தும் உத்தரவுக்கு அமெரிக்க உளவுத்துறை உண்மையாகவே ஆதரவளித்ததா என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.
நாடாளுமன்ற நாயகர் மைக் ஜான்சனிடம் திரு டிரம்ப் அனுப்பிய கடிதம் பின் வெள்ளை மாளிகை இணையப்பக்கத்தில் பதிவிடப்பட்டது.
“அணுவாயுத உற்பத்தித் திட்டத்துக்காக ஈரானின் அரசாங்கம் பயன்படுத்திய மூன்று அணுவாயுத இடங்களைத் துல்லியமாகக் குறி வைத்த அமெரிக்கா தாக்கியது,” என்று திரு டிரம்ப் எழுதியிருந்தார்.
இருப்பினும், 2003ஆம் ஆண்டு தகர்க்கப்பட்ட அணுவாயுத உற்பத்தி முயற்சியை மீண்டும் தொடங்க ஈரானின் தலைவர் அயத்துல்லா அலி கமினெய் உத்தரவிடவில்லை என்று அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை அமைப்பின் துல்சி கபார்ட் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
மார்ச் மாதம் சமர்பிக்கப்பட்ட அந்த மதிப்பீடு மாறவில்லை என்று தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டது.
ஈரான் அதன் அணுவாயுதத் திட்டம் அமைதிப் பயன்பாட்டிற்குரியது என்று வலியுறுத்திவந்தது.
ஈரானின் அணுவாயுதத் திட்டம் பற்றி உளவுத்துறை அளித்த தகவல்களை நிராகரித்த திரு டிரம்ப் கடந்த வாரம் அதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
“உளவுத்துறை என்ன சொல்கிறது என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. ஈரான் அணுவாயுதத் திட்டத்தை வைத்திருக்க முயன்றது,” என்று திரு டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா, நாட்டன்ஸ், இஷாஃபான், ஃபார்டோ ஆகிய மூன்று ஈரானிய அணுவாயுதத் தளங்களை ஜூன் 22ல் தகர்த்தது.
அந்தத் தளங்கள் அழிக்கப்பட்டதாகத் திரு டிரம்ப்பும் உயர் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
ஈரான்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் அதன் அணுவாயுதத் திட்டத்தை ஒருசில மாதங்களுக்கு மட்டுமே ஒத்திவைக்க முடிந்ததாக விவரங்கள் அறிந்த வட்டாரங்கள் கூறின.