பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் அதிகரித்துவரும் செம்பு உலோகத்தின் விலையால், அதுதொடர்புடைய திருட்டுச் சம்பவங்களும் நாசவேலைகளும் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, உலோகத் திருட்டில் ஈடுபடும் கும்பலால் பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒரு கிலோ செம்பின் விலை 42 ரிங்கிட் (S$13.28) வரை உயர்ந்துள்ளது.
ஓர் ஆண்டுக்குமுன் இருந்த நிலவரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இது இருமடங்கு அதிகம்.
அண்மைய ஆண்டுகளில் பழைய இரும்பு, செம்பு, காகிதம் போன்றவற்றை சேகரித்து மறுசுழற்சிக்கு விற்பனை செய்யும் தொழிலில் வெளிநாட்டினர் அதிகம் ஈடுபடுகின்றனர்.
இதனால், அதே தொழில் செய்யும் உரிமம் பெற்ற உள்ளூர் வர்த்தகர்கள் சிரமத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மலேசிய இந்திய உலோக வர்த்தகர்கள், மறுசுழற்சி சங்கத் தலைவர் ஆர்.எஸ். ஆறுமுகம் கூறுகையில், அரசாங்க உள்கட்டமைப்பைச் சேதப்படுத்தி, அதிலிருந்து உலோகத்தைத் திருடும் சம்பவம் அதிகரிப்பதற்கு உரிமம் பெறாமல் பழைய பொருள்களை வாங்கி மறுசுழற்சிக்கும் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுவோரே காரணம் எனச் சாடினார்.
மேலும், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டினர் எனக் கூறிய அவர், இவர்களில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் மூலம் அகதிகள் எனும் சமூக நிலையைப் பெற்றவர்களும் அடங்குவர் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“அவர்கள் நிலையான ஓர் இடத்தில் வசிக்கமாட்டார்கள். இதனால், அவர்கள்மீது அமலாக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் சவாலானது. சட்டவிரோதமாக மறுசுழற்சிக்காகப் பொருள்களைச் சேகரிப்போரின் செயல்பாட்டுச் செலவு குறைவு என்பதால் அவர்கள் அதிக விலை கொடுத்து அப்பொருள்களை வாங்குகின்றனர்,” எனத் திரு ஆறுமுகம் கூறினார்.
“இதனால், அவர்களிடம் பொருள்களை விற்க பலர் முன்வருகின்றனர். அவர்களால் எங்களின் தொழில் பாதிக்கப்படுவதோடு மட்டுமன்றி, ஒட்டுமொத்த துறைக்கும் களங்கம் விளைவிக்கின்றனர்,” என அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதக் கும்பல் செய்யும் திருட்டு, நாசவேலையால் நடத்தப்படும் அமலாக்க நடவடிக்கையில் உரிமம் பெற்று அத்தொழிலில் ஈடுபடுவோர் விரக்தியடைவதாகவும் அவர்கள் ஓரங்கட்டப்பட்டதாக உணர்வதாகவும் ‘த ஸ்டார்’ ஊடகத்திடம் கூறி திரு ஆறுமுகம் வேதனையடைந்தார்.


