சிட்னி: சட்டவிரோதக் கடனடைப்புத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் 475 மில்லியன் ஆஸ்திரேலிய டாலரை (308.66 மில்லியன் வெள்ளி) இழப்பீடாக வழங்க ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அந்நாட்டு அரசாங்கம் இதனை அறிவித்தது. இதற்கு நீதிமன்ற ஒப்புதல் கிடைத்தால் ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவே இழப்பீடாக வழங்கப்படும் ஆக அதிக தொகையாக இருக்கும்.
‘ரோபோடெட்’ என்றழைக்கப்பட்ட அந்த ஏமாற்றுத் திட்டம் 2016லிருந்து 2019ஆம் ஆண்டு வரை பலரைக் குறிவைத்தது. பிறகு திட்டம் சட்டவிரோதமானது என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
‘ரோபோடெட்’ அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடியோரை மேலும் கடனாளிகளாக ஆக்கியதாகவும் பலர் உயிரை மாய்த்துக்கொள்ள நேரிட்டதாகவும் அரசாங்கத் தரப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் இதுவரை 2.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை இழப்பீடாக வழங்கியிருக்கிறது. இவ்விவகாரம், ஆஸ்திரேலியாவின் ஆக மோசமான பொது நிர்வாக ஏமாற்றுச் செயல்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ரோபோடெட் திட்டத்தால் பாதிக்கப்பட்டோர் கோர்டன் லீகல் சட்ட நிறுவனத்துடன் சேர்ந்து முதலில் 2019ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தனர்.