சிங்கப்பூர்க் கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிக்கப்படுவதாக ஜோகூரில் குமுறல்

சிங்கப்பூர்க் கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிக்கப்படுவதாக ஜோகூரில் குமுறல்

2 mins read
800f454f-873c-4e1d-b373-5a86ce9549cd
ஜோகூரின் சுங்கை செனாய் பெலேக்கொக் கம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து எடுத்துவரப்படுவதாகக் கூறப்படும் கட்டுமானக் குப்பை குவிக்கப்படும் பகுதி மூடப்பட்டிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

பொந்தியான்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் சிலருக்கு இரவில் சரியாக உறங்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் இரவில் பல கனரக லாரிகள் அங்கு வந்து கட்டுமானக் குப்பையைக் குவிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அந்தக் குப்பை சிங்கப்பூரிலிருந்து கொண்டுவரப்படுவதாக ஜோகூர் அதிகாரிகள் நம்புகின்றனர்.

சென்ற ஆண்டுத் தொடக்கத்திலிருந்து இந்நிலை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் பின்னிரவில் இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தங்களால் உறங்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பகுதிகளின் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.

செனாய் பெலேக்கொக் கம்பத்தில் காணப்பட்ட கட்டுமானக் குப்பை.
செனாய் பெலேக்கொக் கம்பத்தில் காணப்பட்ட கட்டுமானக் குப்பை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒரே நேரத்தில் ஆறிலிருந்து எட்டு லாரிகள் வந்ததாகக் குடியிருப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர். சில நேரங்களில் 50 லாரிகள் வரை குப்பை குவிக்க வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய வீடமைப்புத் திட்டத்துக்கான கட்டுமானம் நடைபெறுவதாகச் சிலர் தவறாகவும் எண்ணியதுண்டு.

உள்ளூர் ஊடகம் வெளியிட்ட செய்தி

இம்மாதம் 8ஆம் தேதி உள்ளூர் ஊடகமான கொஸ்மோ செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கிராமவாசிகளின் நிலை குறித்துத் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

பொந்தியானில் சட்டவிரோதமாகக் குப்பை குவிக்கப்படும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களை மூடுமாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

விசாரணை தொடக்கம்

அத்தகைய மூன்று இடங்கள் தொடர்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பல சோதனைகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் நடத்தியதாக மலேசியாவின் திடக் கழிவு நிர்வாக, பொதுத் துப்புரவுப் பணி அமைப்பு (எஸ்டபிள்யுகார்ப்) தெரிவித்தது.

ஜாலான் காம்புங் சினார் ஹரப்பானில் ‘டிப்பர் டிரக்’ வகை லாரி ஒன்று கலந்த குப்பையைக் குவிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதுகுறித்து விசாரணை நடந்ததாகவும் எஸ்டபிள்யுகார்ப் அந்த அறிக்கையில் குறிப்பிட்டது. குப்பை சிங்கப்பூரிலிருந்து வருவது முதற்கட்ட விகாரணையில் தெரியவந்துள்ளதாக எஸ்டபிள்யுகார்ப்பின் ஜோகூருக்கான இயக்குநர் ஸைனால் ஃபிட்ரி அகம்மது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

சட்டவிரோதக் குப்பைக் குவிப்பு எனக் கூறப்படும் இச்செயல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்கின்றன என்று குடியிருப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.

நிறுவனங்கள் சிங்கப்பூரிலிருந்து ஜோகூருக்குக் குப்பையைக் கொண்டுசெல்கின்றனவா என்று கேட்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், சிங்கப்பூரின் தேசியச் சுற்றுப்புற வாரியத்தைத் தொடர்புகொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உலகம்மலேசியாகுப்பைகட்டுமானம்