சிலாங்கூரில் $3.97 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதப் பொருள்கள் பறிமுதல்

சிலாங்கூரில் $3.97 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோதப் பொருள்கள் பறிமுதல்

2 mins read
b63eef16-4a32-4537-b9d7-0c2ce0b93379
‘ஒப்ஸ் தரிங் அல்ஃபா 3’, ‘ஒப்ஸ் தரிங் அல்ஃபா 1’ ஆகிய பெயர்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில், $3.97 மில்லியன் (12.7 மில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள தீர்வைச் செலுத்தப்படாத சிகரெட், மின்சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. - படம்: த ஸ்டார்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தில் தீர்வைச் செலுத்தப்படாத மின்சிகரெட்டுகளையும், வழக்கமான சிகரெட்டுகளையும் விற்பனை செய்த இரு முக்கிய கடத்தல் கும்பல்களை மலேசியக் காவல்துறை முடக்கியுள்ளது.

அவர்களிடமிருந்து $3.97 மில்லியன் (12.7 மில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள சட்டவிரோதப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

‘ஒப்ஸ் தரிங் அல்ஃபா 3’, ‘ஒப்ஸ் தரிங் அல்ஃபா 1’ ஆகிய பெயர்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைகளில் அக்கும்பல்கள் சிக்கின.

இது குறித்து செராசில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குத் துறையின் இயக்குநர் முகமது யுஸ்ரீ ஹாசன் பஸ்ரி மேற்குறிப்பிட்ட விவரங்களை வெளியிட்டார்.

ஜூலை 28ஆம் தேதி பத்து மலைப் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து சந்தேக நபர்கள் பிடிபட்டனர் என அவர் கூறினார்.

மேலும், அங்கிருந்து $2.93 மில்லியன் (9.4 மில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள மின்சிகரெட் தயாரிக்கத் தேவையான திரவப் போத்தல்கள், சாதனங்கள், பெட்டிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றும் அவர் விவரித்தார்.

பிடிப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஜூலை 27ஆம் தேதி பூச்சோங் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் $1.031 மில்லியன் (3.3 மில்லியன் ரிங்கிட்) மதிப்புள்ள தீர்வைச் செலுத்தப்படாத 1.66 மில்லியன் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அச்சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, சுங்கச் சட்டத்தின்கீழ் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் திரு முகமது யுஸ்ரீ கூறினார்.

இந்த ஆண்டில் இதுவரை $87.624 மில்லியன் (280.4 மில்லியன் ரிங்கிட்) பெறுமானமுள்ள கள்ளப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டிய குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கண்டறிந்து முடக்குவதே காவல்துறையின் முதன்மை நோக்கம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்