பேங்காக்: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் போதைப்பொருள் அடங்கிய மின்சிகரெட்டுகளை விற்றதற்காகக் சிங்கப்பூர் ஆடவர் உள்ளிட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டது.
அந்தக் கும்பல் சட்டவிரோத வழிகளில் 16 மில்லியன் பாட் (S$627,000) பணத்தை ஈட்டியதாக நம்பப்படுவதாகத் தாய்லாந்துக் காவல்துறை தெரிவித்தது.
ஏப்ரல் 30ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் அறுவரில் நியோ மிங் லூன் என்ற 37 வயது சிங்கப்பூரரும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேங்காக்கின் டின் டேங் வட்டாரத்திலும் பத்தும் தானியில் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்திலும் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மின்சிகரெட் கருவிகளும் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
கெட்டமின் போன்ற போதைப் பொருள்கள் கலந்த கடத்தப்பட்ட மின்சிகரெட்டுகள் சுற்றுப்பயணிகளிடம் விற்கப்படுவது குறித்து புகார் அளிக்கப்பட்டதாக தாய்லாந்தின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு மே 2ஆம் தேதி சொன்னது.
சுற்றுப்பயணிபோல் நடித்த காவல்துறை அதிகாரி ஒருவர், சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரிடமிருந்து 2,500 பாட் தொகைக்கு மின்சிகரெட் வாங்கியதை அடுத்து காவல்துறையின் சந்தேகம் உறுதியானது.
சிங்கப்பூரரான நியோவும் தாய்லாந்தைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களும் விற்பனையாளர்களுக்கு மின்சிகரெட்டுகளை விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நியோவும் மற்ற இரண்டு ஆடவர்களும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
விசாரணைகள் தொடர்கின்றன.
சிங்கப்பூரைப்போல தாய்லாந்திலும் மின்சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.