பேங்காக்: வரி, செலவு செய்தல் ஆகியவற்றில் மாற்றம் செய்துகொள்ளாமல் அமெரிக்காவால் அரசாங்கக் கடனிலிருந்து வெளிவர முடியாது என்று அனைத்துலகப் பண நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியோர்ஜீவா புதன்கிழமை (அக்டோபர் 14) எச்சரித்தார்.
அதேபோல், சீனா ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிப் பாதையிலிருந்து உள்ளூர்ப் பயன்பாடு சார்ந்த வளர்ச்சிக்கு மாறிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார். நிதி, வர்த்தகம் ஆகியவற்றில் அதிகரித்துவரும் சமமின்மையைக் கையாள கடுமையான கொள்கை மாற்றங்களைச் செய்யுமாறு திருவாட்டி ஜியோர்ஜீவா, உலகின் ஆகப்பெரிய இரு பொருளியல்களுக்கும் குரல் கொடுத்தார்.
அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி இரண்டும் ஆண்டுதோறும் சந்திப்புகளை நடத்திவருகின்றன. தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் நடந்த அச்சந்திப்புகளில் திருவாட்டி ஜியோர்ஜீவா பேசினார்.
அளவுக்கதிகமாகக் கடன் சேர்ப்பதைப் பொறுத்தவரை வளர்ந்த பொருளியல்கள்தான் மிக மோசமாக நடந்துகொள்வதாக அவர் சாடினார். குறிப்பாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைப் பற்றி அவர் பேசினார்.
அவற்றின் தவறுகளால் குறைந்த வருமானத்தைக் கொண்ட நாடுகள் பொறுப்பேற்கும் சூழல் ஏற்படுவதாகவும் திருவாட்டி ஜியோர்ஜீவா சுட்டினார்.
அமெரிக்காவுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்ட நிதிக் கொள்கை தேவையா என்று செய்தியாளர் கூட்டத்தில் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், அமெரிக்கா எதிர்கொள்ளும் நிதிப் பற்றாக்குறை, கடன் சுமை ஆகியவற்றையும் அவற்றைச் சமாளிக்கக்கூடியவையாக ஆக்கவேண்டும் என்பதையும் அந்நாட்டின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் அறிவார் என்றார்.
