ஜார்ஜ் டவுன்: மலேசியக் கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக், முறைகேடான நடத்தை குறித்து மாணவர்களிடம் இருந்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை மெத்தனமாகக் கருதக்கூடாது என்று மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கும் மாநிலக் கல்விப் பிரிவுகளுக்கும் அவர் அறிவுறுத்தினார்.
“பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பிள்ளை ஒன்று புகார் அளித்தால், பெற்றோரும் ஆசிரியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபற்றி அதிகாரிகளுக்குத் தெரிவித்து புகார் குறித்து தீர விசாரிக்கவேண்டும்,” என்றார் அவர்.
சமூகநலத் துறையிலிருந்து பிள்ளைக்குப் பாதுகாப்பு அளிப்பதுடன் அந்தப் பிள்ளையிடம் சுகாதாரப் பரிசோதனைகளும் நடத்தப்படவேண்டும் என்றார் அமைச்சர் ஃபட்லினா.
சரவாக்கின் லாவாஸ் என்ற பகுதியில் ஆசிரியரையும் மாணவரையும் சம்பந்தப்படுத்திய ஒரு சம்பவம், சமூக ஊடகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதன் தொடர்பில் திருவாட்டி ஃபட்லினா கருத்துரைத்தார்.
அதுபோன்ற சம்பவங்கள் குறித்து அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்களும் தொடர்ந்து விழிப்புடன் இருந்து காவல்துறையிடம் புகார் அளிப்பது போன்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பாலியல் துன்புறுத்தல் குறித்து அறியவரும் பொதுமக்கள், சமூக ஊடகங்களில் அதைப் பகிர்வதற்குப் பதிலாக அதிகாரிகளிடம் நேரடியாகப் புகார் அளிக்கும்படியும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, பெர்லிஸ் பகுதியில் பகடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் ஆறாம் ஆண்டு மாணவர் குறித்து கல்வியமைச்சு விசாரணை நடத்துவதையும் அமைச்சர் ஃபட்லினா பகிர்ந்துகொண்டார். அதிகாரிகளுக்கும் அதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
“பகடிவதையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். அத்தகைய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திருவாட்டி ஃபட்லினா எச்சரித்தார்.

