ஜோகூர் பாரு: ஜோகூர்ப் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராஹிம் பகடிவதையை முற்றிலும் நிறுத்துவதற்கான இயக்கத்தை ஜோகூரில் உடனடியாகத் தொடங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு வெவ்வேறு பள்ளிகளில் பகடிவதைக்கு ஆளான 10 வயது சிறுவன் மூக்கில் ஏற்பட்ட புற்றுநோய்க்குச் சிகிச்சைப் பெற்றுவருகிறான்.
பட்டத்து இளவரசர் இஸ்மாயில் சிறுவனை நேரில் சென்று சந்தித்ததை அடுத்து பகடிவதைக்கு எதிரான இயக்கம் குறித்து அறிவித்தார்.
சிறுவனைச் சந்தித்தப் பிறகு ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட பட்டத்து இளவரசர், பகடிவதைக்குக் குறிப்பாக பள்ளிகளில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
“பகடிவதை முடக்கப்படவேண்டும். பிள்ளைகளுக்கான கல்வி நிலையங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் உடனடியாக வலுப்படுத்தப்படவேண்டும்,” என்று பட்டத்து இளவரசர் குறிப்பிட்டார்.
மூக்குப் புற்றுநோய்க்கு ஆளான சிறுவன் ஸ்கூடாயில் உள்ள சமயப் பள்ளியிலும் தொடக்கப்பள்ளியிலும் பகடிவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட மகன் கெட்டக் கனவுகளால் தூக்கத்தில் அழுவதுண்டு என்ற சிறுவனின் தாய், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் சமயப் பள்ளியில் முதல் பகடிவதைச் சம்பவம் நேர்ந்ததாகக் குறிப்பிட்டார். இரண்டாவது சம்பவம் சிறுவன் பயின்ற வேறொரு பள்ளியில் இம்மாதத் தொடக்கத்தில் நிகழ்ந்தது.
மூக்குப் புற்றுநோயால் கல்வியில் பெரும்பகுதியை இழந்த தமது மகன் 2024ஆம் ஆண்டிலிருந்து பள்ளிக்குச் செல்ல ஆவலுடன் இருந்ததையும் சிறுவனின் தாய் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டிலிருந்து சிகிச்சைக்காகவும் அறுவைச் சிகிச்சைக்காகவும் சிறுவன் அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டிய சூழல் ஏற்பட்டது.
“சிறுவனின் உடல்நிலை தேறுகிறது என்றும் பள்ளிக்கு அவன் திரும்பச் செல்ல முடியும் என்றும் மருத்துவர்கள் அண்மையில் கூறினர்,” என்று சிறுவனின் தாய் சொன்னார்.
வேறொரு பள்ளிக்கு மகனை மாற்றுவது குறித்து கேட்ட கேள்விக்கு, “என் மகன் பாதிக்கப்பட்டவன். அவனை ஏன் வேறொரு பள்ளிக்கு மாற்றவேண்டும்,” என்றார் தாய்.