உடனடி போர்நிறுத்தத்திற்குப் பாகிஸ்தானின் சமரசத் திட்டம்

அமெரிக்காவும் ஈரானும் தீவிர ஆலோசனை

உடனடி போர்நிறுத்தத்திற்குப் பாகிஸ்தானின் சமரசத் திட்டம்

2 mins read
481a0ec1-0c6c-4025-812d-25b7efc0c8d4
பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 5) இஸ்ரேலின் தாக்குதலால் சிதையுண்ட பகுதி. - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: போரை முடிவுக்குக் கொண்டுவந்து, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான புதிய அமைதித் திட்டத்தை பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளது.

‘இஸ்லாமாபாத் உடன்படிக்கை’ என்று அழைக்கப்படும் அந்த வரைவுத் திட்டம், அமெரிக்கா, ஈரான் ஆகிய இரு நாடுகளிடமும் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அனைத்து அம்சங்களும் இன்றே ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்,” என்று தகவலறிந்த ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தையில் ஒரே தொடர்பு ஊடகமாகச் செயல்படும் பாகிஸ்தான் வாயிலாக, தொடக்கநிலை புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் இறுதிசெய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு வட்டாரத்தை மேற்கோள் காட்டி ‘ஆக்சியோஸ்’ செய்தித் தளம் ஏப்ரல் 5ஆம் தேதி முதலில் வெளியிட்ட செய்தியில், போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இரண்டுகட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 45 நாள் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா, ஈரான் மத்திய கிழக்கு வட்டார சமரசப் பேச்சாளர்கள் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்திருந்தது.

அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், மத்திய கிழக்குக்கான அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருடன் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் கூறின.

கிழக்கு பெய்ரூட்டில் ஏப்ரல் 5ஆம் தேதி இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் எரிந்துகொண்டிருக்கும் கட்டடங்களை ஒரு சிறுமி சன்னல் வழியே பார்க்கிறார்.
கிழக்கு பெய்ரூட்டில் ஏப்ரல் 5ஆம் தேதி இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் எரிந்துகொண்டிருக்கும் கட்டடங்களை ஒரு சிறுமி சன்னல் வழியே பார்க்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

இரு நிலைகள்

இரு நிலைகளைக் கொண்ட அத்திட்டத்தின் முதற்கட்டமாக, போரை உடனடியாக நிறுத்திவிட்டு ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்.

இரண்டாம் கட்டமாக, அடுத்த 15 முதல் 20 நாள்களுக்குள் நிரந்தர அமைதிக்கான விரிவான ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வேண்டும்.

ஏமனில் ஈரான் ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஹுதி படையினர்.
ஏமனில் ஈரான் ஆதரவுப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஹுதி படையினர். - படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவின் நிபந்தனைகளை நிராகரித்தது ஈரான்

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு ஈரான் தனது நிலைப்பாட்டையும் கோரிக்கைகளையும் வகுத்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்தார்.

“அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. நிபந்தனைகளும் போர் குற்ற அச்சுறுத்தல்களும் பேச்சுவார்த்தைக்கு உகந்தவை அல்ல. தேசிய நலன் சார்ந்த ஈரானின் கோரிக்கைகள் உரிய நேரத்தில் விரிவாக அறிவிக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானின் பரிந்துரையைப் பரிசீலித்தபோதும், தற்காலிகப் போர்நிறுத்தத்திற்காக தனது முக்கியப் போக்குவரத்துப் பாதையைத் திறக்க முடியாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

இஸ்‌ரேலில் தாக்கப்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) நெருக்கடிகால ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்‌ரேலில் தாக்கப்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) நெருக்கடிகால ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

தாக்குதலைத் தீவிரப்படுத்திய ஈரான்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஈரான் திங்கட்கிழமை (ஏப்ரல் 6) இஸ்ரேல்மீதும் வளைகுடா நாடுகள்மீதும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. “பேரழிவை ஏற்படுத்தும் பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும்,” என்றும் அந்நாடு எச்சரித்துள்ளது.

உலகளாவிய தாக்கம்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். போர் நீடித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஹோர்முஸ் நீரிணை மிக முக்கியப் பங்கு வகிப்பதால் இந்த அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

இந்த ஒப்பந்தம் உறுதியானால், ஈரானின் அணுசக்தித் திட்டம், பொருளியல் தடைகள் நீக்கம் குறித்து ஒரு தெளிவான முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்