சாபாவில் இணைய மோசடி மையத்தில் குடிநுழைவுத்துறை சோதனை; 12 சீனர்கள் கைது

சாபாவில் இணைய மோசடி மையத்தில் குடிநுழைவுத்துறை சோதனை; 12 சீனர்கள் கைது

படம்: தி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 6:04 pm

1 mins read

கோத்தா கினபாலு: சாபாவின் டாமாய் பகுதியில், பல நாடுகளைச் சேர்ந்தவர்களை இலக்காகக் கொண்டு இணைய மோசடி மையமாகச் செயல்பட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பங்களாவில், சாபா குடிநுழைவுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) சோதனை நடத்தினர்.

‘ஆப்ஸ் செர்காப்’ என்ற இந்த நடவடிக்கையில், 20 முதல் 43 வயதுக்குட்பட்ட 12 சீனக் குடிமக்கள் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து 153 ஆப்பிள் கைப்பேசிகள், 11 கணினிகள், 13 இணைய திசைவிகள் (routers), 22 சிம் அட்டைகள், வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சாபா குடிநுழைவுத்துறை இயக்குநர் எஸ்.எச்.சித்தி சலேஹா ஹபிப் யூசோஃப் தெரிவித்தார்.

சீனா, இந்தியா, கம்போடியா, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை இலக்காகக் கொண்டு இக்கும்பல் இணைய நிதி மோசடியில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாரிகளின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க அவர்கள் அடிக்கடி இடமாறி வந்துள்ளனர்

கைதானவர்களில் நால்வர் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்ததாகவும் எண்மர் செல்லுபடியாகும் பயண ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
இணைய மோசடிகுடிநுழைவுகைது